அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் நடத்திய போராட்டங்கள் தொடர்பாக பிஹார் உட்பட 3 மாநிலங்களில் உள்ள பயிற்சி நிறுவனங்களை போலீஸார் கண்காணிக்கின்றனர்.
ராணுவத்துக்கு புதிதாக இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் தெலங்கானாவிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. மாணவர்களை போராட தூண்டியதாக பிஹார், ஆந்திரா, தெலங்கானா ஆகிய 3 மாநிலங்களில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் மீது புகார் எழுந்துள்ளதால் பயிற்சி நிறுவனங்களை போலீஸார் கண்காணிக்கின்றனர்.
ஆந்திராவில் பயிற்சி நிறுவனங்கள் நடத்தி வரும் அவுலா சுப்பாராவ் என்பவரை தனது மையத்தில் படித்து வரும் மாணவர்களை அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக தூண்டிவிட்டதாக போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வாட்ஸ் – அப் மூலம் செய்திகளை அனுப்பி மாணவர்களை தூண்டிவிட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் கலவரத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக பிஹாரில் 2 பயிற்சி நிறுவனங்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாட்னா, தெலங்கானாவில் மேலும் பல பயிற்சிமையங்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர். – பிடிஐ