புனே: மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு தேர்வில், 43 வயது தந்தை தேர்ச்சி பெற்றார். மகன் 2 பாடங்களில் தோல்வி அடைந்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனேவில் வசிப்பவர் பாஸ்கர் வாக்மரே (43). இவர் குடும்ப சூழல் காரணமாக 7-ம் வகுப்புக்குப்பின், வேலைக்கு சென்று விட்டார். இவரது மகன்சாகில் சமீபத்தில் 10-ம் வகுப்புபொதுத்தேர்வு எழுதினான். தொடர்ந்து படிக்க வேண்டும் என விரும்பிய பாஸ்கர், 30 ஆண்டுகளுக்குப்பின், தனது மகனுடன் சேர்ந்து 10-ம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்தார்.
ஒவ்வொரு நாளும் வேலைக்கு சென்று திரும்பியபின் தேர்வுக்காக படித்தார். தந்தையும், மகனும் 10-ம் வகுப்புதேர்வை எழுதி முடித்தனர். இதன் முடிவுகள் கடந்த வெள்ளிக் கிழமை வெளியிடப்பட்டது. இதில் பாஸ்கர் தேர்ச்சி பெற்றார்.அவரது மகன் 2 பாடத்தில் தோல்வியடைந்தான்.
இதுகுறித்து பாஸ்கர் கூறுகையில், ‘‘எனது மகன் 10-ம் வகுப்பு படித்தது, நானும் படிக்க உதவியாக இருந்தது. தற்போது நான் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சி. ஆனால் என் மகன் 2 பாடத்தில் தோல்வியடைந்தது வருத்தமாக உள்ளது. துணைத் தேர்வில் எனது மகன் தேர்ச்சி பெற நான் உதவுவேன்’’ என்றார்.
இதுகுறித்து சாகில் கூறுகையில், ‘‘என் தந்தை விரும்பியபடி அவர் தேர்ச்சி பெற்றது எனக்கு மகிழ்ச்சி. துணைத் தேர்வுக்கு தயாராகி நானும், தேர்ச்சி பெற முயற்சிப்பேன்’’ என்றார். – பிடிஐ