தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் வி.பி.ராமன் வாழ்க்கை வரலாற்று நூலை, அவர் மகன் வி.எஸ்.ராமன் எழுதி ‘மகுடம் மறுத்த மன்னன்’ என்ற பெயரில் தமிழிலும்… `The Man who would not be King’ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் நேற்று (ஜூன் 19) வெளியிடப்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளமுடியாததால், அவர் சார்பில் கலந்துகொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழ் நூலை வெளியிட்டார். ஆங்கில நூலை உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் வெளியிட்டார். இரண்டையும் வி.பி.ராமனின் மனைவி கல்பகம் ராமன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியை சுஹாசினி மணிரத்னம் தொகுத்து வழங்கினார். முதலில் வரவேற்றுப் பேசிய வி.பி.ராமனின் மகனும், நடிகருமான மோகன் ராம், கலைஞர் கருணாநிதி குடும்பத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் உள்ள எழுபது ஆண்டுக்கால நட்பைப் பற்றிப் பேசினார்.
அடுத்துப் பேசியவர் இந்த நூலை எழுதிய வி.எஸ்.ராமன்!
ஒரு சாதாரண நாளில் ஆரம்பித்த இந்த நூலுக்கான வேலை, கொரோனாவின் ஆரம்பக் கட்டத்தில் கடும் உழைப்புக்குப் பிறகு இப்போது ஒரு முழுமையான வாழ்க்கை வரலாறாக மாறியதை சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார். “என் தந்தையின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு, இந்த ‘உலக தந்தையர் தினத்தில்’ நடப்பது எத்தனை சாலப் பொருத்தம்!” என்று மகிழ்ந்த அவர், “இந்த நூலின் விற்பனை முழுவதும் வி.பி.ராமன் அறக்கட்டளைக்குத்தான் செல்லும்” என்று கூறியபோது அரங்கம் கைதட்டி மகிழ்ந்தது.
இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், முன்னாள் கிராண்ட் மாஸ்டர் கே.ஆர்.என்.மேனன் ஆகியோர் வி.பி.ராமன் உடனான தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் சார்பில் கலந்துகொண்டு தமிழ்ப் பதிப்பை வெளியிட்ட துரைமுருகன், தனக்கும் வி.பி.ராமன் குடும்பத்துக்குமான நெருக்கத்தை தனக்கேயுரிய பாணியில் பேசிவிட்டு முதல்வர் அளித்த உரையை வாசித்தார்.
அந்த உரையில், “நம் இதயங்களில் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போற்றுதலுக்குரிய வி.பி.ராமன் வாழ்க்கை வரலாற்று நூலை ‘மகுடம் மறுத்த மன்னன்’ என்ற தலைப்பில் அவரின் மகன் பி.எஸ்.ராமன் எழுதியிருக்கிறார். மகுடம் மறுத்தவராக இருந்தாலும், தான் வாழ்ந்த காலத்தில் முடிசூடா மன்னராக இருந்தவர்தான் வி.பி.ராமன். கோர்ட்டில் கோலோச்சியவர் வி.பி.ராமன். அனைத்துக்கும் மேலாக தி.மு.க-வுக்கு தொடக்க காலத்தில் பல்வேறு வகையில் துணையாக இருந்தவர் வி.பி.ராமன்.
தி.மு.க-வின் செயற்குழுவில் இடம்பெற்ற வி.பி.ராமன், தி.மு.க-வின் சட்டதிட்டத்தை உருவாக்கும் குழுவிலும் இடம் பெற்றவர். திராவிட நாடு கொள்கையில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக இயக்கத்திலிருந்து 1961-ம் ஆண்டு தன்னை விடுவித்துக் கொண்டார். இருந்தாலும், 1967-ம் ஆண்டு தேர்தலில் அண்ணாவுக்கும் ராஜாஜிக்குமான சந்திப்பை ஏற்பாடு செய்து கூட்டணிக்கு உதவியவர் வி.பி.ராமன்தான். அண்ணா மறைந்தபோது இறுதி ஊர்வலத்தில் வி.பி.ராமன் நடந்து சென்றதை இந்தப் புத்தகம் குறிப்பிட்டிருக்கிறது. அதன்பிறகு அரசியல் ரீதியாக, அவர் மாறான நிலைப்பாடுகள் எடுத்தாலும் கலைஞருடனான நட்பு குறைந்ததில்லை. இந்தப் புத்தகம் மிகமிக அரிய பொக்கிஷம். வரலாற்றைத் தனிமனிதர்கள் தீர்மானிக்கிறார்கள் என்றால், அப்படித் தீர்மானித்த தனிமனிதர்களில் வி.பி.ராமனும் ஒருவர்” என்று குறிப்பிட்டப்பட்டிருந்தது.
அடுத்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனின் உரை, நிகழ்ச்சியின் மகுடமாகவே அமைந்தது. “ ‘மகுடம் மறுத்த மன்னன்’ என்ற தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியிருப்பது ஆச்சர்யமல்ல. ராமன் என்றாலே அவர் மகுடம் மறுத்த மன்னனாகத்தான் இருப்பார், அல்லது மகுடம் மறுக்கப்பட்டவராகவும் இருக்கலாம். தந்தை குறித்த புத்தகத்தை மகன் எழுதி, தன் சகோதரர்களுடன் மேடையில் அமர்ந்திருக்க, தாயார் அந்த நூலைப் பெற்றுக்கொள்வதென்பது யாருக்கு வாய்க்கும்?” என்றவர் தொடர்ந்து, “என்ன, இந்த நூல் 30 ஆண்டுகள் தாமதமாக வருகிறது.. சரி… வாய்தா போடாமல் வழக்கறிஞர்களால் எதையும் செய்ய முடியாதுதான்” என்று சொன்னபோது அரங்கம் அமைதிக்குத் திரும்ப சில நிமிடங்கள் எடுத்தது.
தொடர்ந்து, “ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை அவர் வாழ்க்கை வரலாற்றை படித்துத் தெரிந்துகொள்வதைவிட, எத்தனை பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றில் அவர் பெயர் இருக்கும் என்றும் பார்க்கலாம். வி.பி.ராமனின் பெயர், அப்படி பலரது வாழ்க்கை வரலாற்றிலும் இருக்கும். கண்ணதாசன் தன் வாழ்க்கை வரலாறான வனவாசத்தில், வி.பி.ராமனுக்கு தான் கடமைபட்டிருப்பதைக் குறிப்பிட்டிருப்பார். வழக்கறிஞராக மட்டுமல்லாது அரசியல், சினிமா, இசை, எழுத்து, கற்பித்தல், நடிப்பு என அனைத்து துறைகளிலும் திறமை கொண்டிருந்தார்” என்று புகழாரம் சூட்டினார் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன்.
நிகழ்ச்சியில் நீதித்துறை, திரைத்துறை, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வி.ஐ.பி-க்கள் பலரும் கலந்துகொண்டனர்.