மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் திருமதி. பிரியா அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.30.41 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை மேயர் திருமதி ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 2,071 கி.மீ. நீளமுள்ள 8,835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கொசஸ்தலையாறு மற்றும் கோவளம் வடிநிலப்பகுதிகளில் பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-73ல் மூலதன நிதியின் கீழ் ரூ.7.41 கோடி மதிப்பீட்டில் புளியந்தோப்பு பிரதான சாலையில் 620 மீ. நீளம் மற்றும் பவுடர் மில்ஸ் சாலையில் 430 மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.23 கோடி மதிப்பீட்டில் வார்டு-72க்குட்பட்ட வீரா தெருவில் 5,163 மீ நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் பணிகளையும் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தாயகம் கவி, சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.