மிமிக்ரி கலைஞர்கள் சங்கத்திற்கு நன்கொடை வழங்கிய சுரேஷ்கோபி
மலையாள திரையுலகில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. இடையில் அரசியலில் களம் இறங்கியவர், சில காலம் நடிப்பை விட்டு ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் முழுமூச்சாக களமிறங்கியுள்ள சுரேஷ்கோபி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் நடித்த காவல் என்கிற படம் வெளியான நிலையில் அடுத்ததாக பாப்பன், ஒத்தக்கொம்பன் உள்ளிட்ட சில படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் புதிதாக ஒரு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சுரேஷ்கோபி. இது அவரது 255 வது படமாகும். இந்த படத்திற்காக தனக்கு கிடைத்த அட்வான்ஸ் தொகையிலிருந்து ரூபாய் இரண்டு லட்சத்தை மிமிக்ரி கலைஞர்கள் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் சுரேஷ்கோபி. இதற்கான காசோலையை பிரபல இயக்குனரும் அதேசமயம் மிமிக்ரி கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினருமான நாதிர்ஷாவிடம் வழங்கியுள்ளார் சுரேஷ்கோபி.
இப்போது மட்டுமல்ல, தான் ஒவ்வொரு புதிய படம் ஒப்புக்கொள்ளும் போதும் மிமிக்ரி கலைஞர்கள் சங்கத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் நன்கொடை வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார் சுரேஷ்கோபி. சினிமாவிற்குள் நுழையும் முன்பாக சுரேஷ்கோபியும் மிமிக்ரி கலைஞராக இருந்தவர்தான் என்பதும் அதனால் அவர்களது சிரமங்கள் தனக்கு நன்றாகவே தெரியும் என்பதால் அவர்களுக்கு தொடர்ந்து நன்கொடை வழங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.