சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சசிகலா ஓபிஎஸ் சந்திப்பது குறித்த கேள்விகள் எழுந்தன.
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரை தினமும் ஆதரவாளர்கள் சந்தித்து வருகின்றனர். ஓபிஎஸ்சை நேற்று சந்தித்த ஆவின் வைத்தியநாதன் செய்தியாளர்களை சந்திக்கையில், “சசிகலா தலைமையில் பயணிக்க ஓபிஎஸ் ஒப்புக்கொண்டுள்ளார். எடப்பாடிக்கு சசிகலா தலைமை எவ்வளவோ பரவாயில்லை என்று ஓபிஎஸ் கூறினார். தேவைப்பட்டால் சசிகலாவை ஓபிஎஸ் சந்திப்பார்” என்று தெரிவித்தார்.
அதேநேரம் இரவு செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் மகனும் தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத்திடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது சசிகலாவை ஓபிஎஸ் சந்திப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அது தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்” என்று தெரிவித்த ரவீந்திரநாத், “கட்சியின் பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்குகொள்வார்” என்று தெரிவித்தார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுக அரசை பாராட்டியகு குறித்து அதிமுகவில் சர்ச்சை எழுந்தது என்ற கேள்விக்கு பதில் கொடுத்த ரவீந்திரநாத், “முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது, எனது தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களின் பிரச்சனைகளை சொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டும்தான். அன்றைக்கு நடந்த ஆலோசனையின்போது தான் முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு மக்களின் கோரிக்கைகளை எடுத்து சொன்னேன். இதை அரசியல் ஆக்குவது எந்தவகையில் நியாயம். அதிமுக பொதுக்குழு திட்டமிட்டு நடக்குமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என்று தெரிவித்துளளார்.