சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், 2 நாட்களுக்கு அவர் பங்கேற்க இருந்தஅரசு நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
சென்னையிலும், வெளியூர்களிலும் அரசு மற்றும் திமுக சார்பில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். முன்னாள் தலைமை வழக்கறிஞர் மறைந்த வி.பி.ராமன் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இது உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் முதல்வர் பங்கேற்க இருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை அவருக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. இதையடுத்து, நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் பங்கேற்கவில்லை. இன்றும், நாளையும் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு. முதல்வர் ஸ்டாலின் 20-ம் தேதிராணிப்பேட்டை, 21-ம் தேதி திருப்பத்தூர், வேலூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. முதல்வருக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, அந்த நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்படுகின்றன. நிகழ்ச்சி தேதி பின்னர் அறிவிக்கப்படும்.