பஞ்சாப் மாநிலம், பத்தன்கோட் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் நீதிமன்றத்தில் பாதுகாப்புக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “21 வயதான எனக்கும் 16 வயதான என் காதலிக்கும் முஸ்லிம் சம்பிரதாயப்படி கடந்த ஜூன் 8, 2022 அன்று திருமணம் நடந்து முடிந்தது. ஆனால், தற்போது எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் விருப்பத்தை மீறி திருமணம் செய்ததற்காக எங்களைப் பிரிக்க நினைக்கிறார்கள். எனவே, எங்களின் திருமண பந்தத்தை பாதுகாக்க கோருகிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தனர். எதிர் மனுதாரர்கள் தரப்பில் முகமதிய சட்டத்தில் பொறுப்பாளரின் திருமண ஒப்பந்தம் இல்லாவிட்டால் திருமணம் செல்லாது என வாதிடப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கை பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஜஸ்ஜித் சிங் பேடி தலைமையிலான ஒற்றை நீதிபதி அமர்வு விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “மனுதாரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்துகொண்டதால், இந்திய அரசியலமைப்பில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளை குடும்ப உறுப்பினர்களால் பறிக்கமுடியாது.
இந்த விவகாரத்தில் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கூற்றுப்படி, இந்த ஜோடியின் திருமணம் முஸ்லிம் பாரம்பர்யத்தின் அடிப்படையிலும், முஸ்லிம் சடங்குகளின்படியும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சர் டின்ஷா பர்துன்ஜி முல்லாவின் ‘முகமதிய சட்டத்தின் கோட்பாடுகள்’ என்ற புத்தகத்தில் பிரிவு 195-ன் படி, மனுதாரர் 16 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதால், ஒரு நபருடன் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட தகுதியுடையவர். அதே போல அவருடைய விருப்பத்துக்குரியவர் 21 வயதுக்கு மேற்பட்டவர்.
எனவே, மனுதாரர்கள் இருவரும் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி திருமண வயதுடையவர்கள். எனவே, திருமணமான தம்பதிகளின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாதுகாவலருக்கு உரிமை இல்லை. அதனால், தம்பதியருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவும், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.