எஸ். இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்
மொழிப் போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் நீத்த போராளிகளை ‘மொழிப்போர் தியாகிகள்’ என அழைப்பதுபோல, வேளாண் மின் கட்டணத்தை குறைக்கக்கோரி நடைபெற்ற போராட்டங்களில் உயிரிழந்த போராளிகளை ‘உழவர் தியாகிகள் என அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களது குடும்பத்தினர்க்கு அரசு பணிகளில் வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும், அவர்களது வாரிசுகளுக்கு கருணைத் தொகை மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக் கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் வட்டம் வலையப்பேட்டை மாங்குடி கிராமத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உழவர் மன்ற தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக, வேளாண் மின் கட்டணத்தை குறைக்கக்கோரி 1970-ம் ஆண்டு உழவர் பெருந் தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற கட்டை வண்டி போராட்டத்திலும், அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற பல கட்ட போராட்டங்களிலும் பங்கேற்று தங்களது இன்னுயிரை துப்பாக்கிச்சூட்டிற்கு ஈகிய மாரப்ப கவுண்டர், ராமசாமி கவுண்டர், ஆயிகவுண்டர் உள்ளிட்ட 46 விவசாயிகள், சிறைகள் மற்றும் போராட்ட களங்களில் உயிரிழந்த மேலும் 17 உழவர்களுக்கு 52வது நினைவேந்தல் நாளை முன்னிட்டு அவ் விவசாயிகளுக்கு உழவர் மன்ற தலைவர் நடராஜன் தலைமையில் விவசாயிகள் மெழுகுவர்த்திகளை கைகளில் ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தி, அதற்கு பின்னர் வீரவணக்கம் செலுத்தினர்.
இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் கூறுகையில், மொழிப் போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களை மொழிப்போர் தியாகிகள் என அரசு அறிவித்து அவர்களது வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு செய்திருப்பதுபோல வேளாண் மின் கட்டணத்துக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளை ‘உழவர் தியாகிகள்’ என அறிவித்து, அவர்களது குடும்பத்தினர்க்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும். அவர்களது வாரிசுகளுக்கு கருணைத் தொகை மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றார்.
அதேபோல, இந்திய ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய மின் திருத்த சட்டம் 2020ஐ முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று சுவாமிமலை விமல்நாதன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“