பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூன் 18ம் தேதி அன்று தன் தாயார் ஹீராபாய் மோடியின் 100-வது பிறந்த நாளையொட்டி குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது தன் தாயாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆசிபெற்றார்.
இதையடுத்து ‘அம்மா (Mother)’ என்ற தலைப்பில் தன் தாயார் பற்றிக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் தன் இளம் பருவம் பற்றிக் குறிப்பிட்டு பேசிய அவர் ‘அப்பாஸ்’ என்ற தனது இளம் வயது இஸ்லாமிய நண்பர் பற்றி இவ்வாறு கூறியிருந்தார்.
“என் தந்தையுடைய இஸ்லாமிய நண்பர் ஒருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டார். அவரின் மகன் பெயர் அப்பாஸ். அதன்பின் என் தந்தை அப்பாஸை வீட்டிற்கு அழைத்துவந்தார். அப்பாஸ் எங்கள் வீட்டில்தான் தங்கிப் படித்தார். என் அம்மா என்னிடமும், என் சகோதர சகோதரிகளிடமும் எவ்வாறு அன்பு காட்டினாரோ, அதேபோல் அப்பாஸிடமும் அன்பு காட்டி அவரை அன்போடு வளர்த்தார். ஒவ்வொரு ரமலான் பண்டிகையின்போதும் அப்பாஸுக்கு பிடித்தமான பலகாரங்களை என் தாயார் செய்து கொடுப்பார்” என்று தெரிவித்திருந்தார்.
இது சமூகவலைத்தளங்களில் வைரலானதை அடுத்து யார் அந்த அப்பாஸ் என்று சமூகவலைதளப் பயனர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் குஜராத்தைச் சேர்ந்த தீபல் திரிவேதி என்ற பத்திரிகையாளர் அப்பாஸின் புகைப்படத்தை வெளியிட்டு, “அப்பாஸ் குஜராத் அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையில் பணிபுரிந்திருக்கிறார். பின்னர் அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்றவுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு குடிபெயர்ந்து சென்று இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
அப்பாஸ் பாய்க்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள கெராலு தாசில் என்ற இடத்தில் வசிக்கிறார், இளைய மகன் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். அப்பாஸ் பாய் தற்போது தனது இளைய மகனுடன் சிட்னியில் வசித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.