உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் வினீத் குமார். இவர் உணவு டெலிவரி நிறுவனமொன்றில் டெலிவரி பணி செய்து வருகிறார். வினீத்துடன் பணியாற்றும் சக ஊழியர் ஒருவர், தனக்கு வந்த ஆர்டரை இவரிடம் கொடுத்து டெலிவரி செய்யுமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனால் வினீத் குமாரும் குறிப்பிட்ட முகவரிக்கு ஆர்டரை டெலிவரி செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார். வினீத் அந்த முகவரிக்குச் சென்று ஆர்டரைப் பெற்றுக்கொள்ளுமாறு வாடிக்கையாளரை போனில் அழைத்திருக்கிறார்.
வெளியே வந்த அந்த வாடிக்கையாளர் நீ யார்? உன் பெயர் என்ன? உன் சாதி என்ன? போன்ற கேள்விகளை கேட்டிருக்கிறார். அதற்கு வினீத் குமார் பதிலளித்தவுடன், அவர் பட்டியலினத்தவர் என்பதை தெரிந்துகொண்ட அந்த நபர், “நீ தொட்ட அந்த உணவை நான் தொடமாட்டேன்..!” எனக் கூறிவிட்டு வினீத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. அதற்கு வினீத் குமார் பதிலளிக்கவும், வீட்டிலிருந்த ஒரு கும்பல் வெளியே வந்து வினீத் குமாரை தாக்கியிருக்கிறது. அவரை தாக்கும்போது அவர்மீது அந்தக் கும்பல் எச்சில் துப்பியதாகவும் கூறப்படுகிறது. மேலும், வினீத் குமாரின் பைக்கையும் அந்தக் கும்பல் எடுத்துச் சென்றுவிட்டது.
அதையடுத்து செய்வதறியாது திகைத்துப்போன வினீத் காவல்துறை உதவி எண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் வினீத்திடம் விசாரணை மேற்கொண்டனர். வினீத் அளித்த தகவல்களின் அடிப்படையில் லக்னோ காவல்துறையினர் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து வினீத்தை தாக்கிய நபர்களைத் தேடி வருகின்றனர்.