சென்னை: அரசுப் பணி நியமனம் என்பது தேர்வு நடைமுறைகளின் மூலம் பெற வேண்டுமே தவிர, லஞ்சம் கொடுத்து பெற முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
அரசுத் துறைகளில் உயர் பதவிகளில் நியமனம் பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக ஜெகன்நாதன், இந்துமதி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்ததுடன், அவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.
இந்நிலையில், கிளாஸ் 1 பதவிகளுக்கு 78 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்த சடகோபன் என்பவர், தான் கொடுத்த பணத்தில் இருந்து தற்போதைக்கு 10 லட்சம் ரூபாயை வழங்கக் கோரி, பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறி, பணத்தை வழங்க மறுத்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்தும், விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிடக் கோரியும் சடகோபன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு பதவி பெறும் பேராசையில் 78 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்த மனுதாரர், பணத்தை திரும்பப் பெறுவதற்கு, வழக்கு விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், அரசுப் பணி நியமனம் என்பது தேர்வு நடவடிக்கைகள் மூலம் தான் பெற வேண்டுமே தவிர, லஞ்சம் கொடுத்து எந்தப் பணியும் பெற முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
தேர்வு நடவடிக்கைகளில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர் நிலை என்னவாகும் என்ற குற்ற உணர்வு இல்லாமல், அனைத்தும் தெரிந்தே மனுதாரர் 78 லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளதால் அவரது மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.