வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெறும் நிலையில், டில்லியில் போராட்டக்காரர்கள் உள்ளே நுழைவதை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். இதனால், பல கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.
முப்படைகளில் வீரர்களை தேர்வு செய்ய ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஜூன் 14ம் தேதி அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீஹார், உத்தர பிரதேசம், டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் ரயில் பெட்டிகளுக்கு தீ வைப்பு சம்பவமும் நடந்துள்ளது. இதனிடையே இன்று அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தாலும் வட இந்திய மாநிலங்களில் கடும் பாதிப்பு உள்ளது. தலைநகர் டில்லியில், பிற மாநில போராட்டக்காரர்கள் உள்ளே நுழைவதை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை நடத்துகின்றனர். இதனால் டில்லியில் மிக மோசமான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. டில்லியில் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், சாலை போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Advertisement