மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயலாளர் நாயகம் மற்றும் சீனா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா, கொரியக் குடியரசு, ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகளை சந்தித்தார்.
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் திருமதி மிச்செல் பச்லெட் உடனான சந்திப்பின் போது, மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச அமைப்புடன் இலங்கை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்படுவதாக உயர்ஸ்தானிகருக்கு உறுதியளித்தார். காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், நிலையான அபிவிருத்தி இலக்கு பேரவை மற்றும் இலங்கை மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட உள்ளூர் பொறிமுறைகளினால் நாட்டில் எட்டப்பட்டுள்ள பெறுபேறுகளையும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விரிவாக விவரித்தார். இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக உயர்ஸ்தானிகருக்கு முன்னர் விடுக்கப்பட்ட அழைப்பு இன்னும் அப்படியே இருப்பதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். தற்போதைய அமர்வின் ஆரம்பத்தில் உயர்ஸ்தானிகர் அறிவித்தமைக்கு அமைய, அவரது நிறைவான ஓய்விற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
சீனாவின் நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் சென் சூ உடனான இருதரப்பு சந்திப்பின் போது, இலங்கைக்கு பல ஆண்டுகளாக அளித்து வரும் ஆதரவிற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சீனாவுக்கு நன்றி தெரிவித்தார். நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள், குறிப்பாக வெளிநாட்டு இருப்புக்கள் மற்றும் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் அவற்றின் தாக்கம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிய பேராசிரியர் பீரிஸ், கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக சீனா அனுப்பிய கணிசமான அளவிலான உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் தடுப்பூசிகளுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட நட்புறவுகள் மற்றும் எதிர்காலத்தில் உறவை மேலும் வலுப்படுத்தும் எதிர்பார்ப்பு குறித்தும் குறிப்பிடப்பட்டது.
பேராசிரியர் பீரிஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் அமண்டா கோரேலி ஆகியோர் அவுஸ்திரேலியாவின் உள்விவகாரங்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு அமைச்சர் திருமதி கிளாரி ஓ நீலின் இலங்கைக்கான விஜயம் குறித்து கலந்துரையாடினர். உள்நாட்டலுவல்கள் அமைச்சரைச் சந்திப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதை சுட்டிக்காட்டிய பேராசிரியர் பீரிஸ், இலங்கை மனிதாபிமானப் பேரிடராகக் கருதும் சட்டவிரோத இடம்பெயர்வு விவகாரம் தொடர்பாக தொடர்ச்சியான ஆதரவை இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அவுஸ்திரேலியாவிற்கு நல்குவார் என உறுதியளித்தார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயலாளர் நாயகம் திரு. ஜெகன் சப்பகைனைச் சந்தித்த அமைச்சர் பீரிஸ், முன்னுரிமையின் அடிப்படையில் இலங்கைக்கு மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தரக் கண்காணிப்பாளரான தூதுவர் லோட்டே நுட்சனுடனான சந்திப்பில், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பொருளாதார இராஜதந்திரம் தொடர்பான பிரச்சினைகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வலியுறுத்தினார்.
அரபு லீக்கின் ஒருங்கிணைப்பாளரும் ஜோர்தானின் நிரந்தரப் பிரதிநிதியுமான தூதுவர் வாலிட் காலிட் ஒபேதத், கொரியக் குடியரசின் நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் டேஹோ லீ, நெதர்லாந்தின் தூதரகப் பொறுப்பாளர் நடாலி ஒலிஜ்ஸ்லேகர் மற்றும் ஜேர்மனியின் பிரதி நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் ஹான்ஸ்-பீட்டர் ஜூகல் ஆகியோருடனும் டன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 ஜூன் 19