கொரோனா காரணமாக கடந்த கல்வியாண்டில் வகுப்புகள் காலதாமதமாக தொடங்கியதால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டன. இந்த இரு தேர்வுகளையும் எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் முடிவுகள் வெளியிடப்பட்டன.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9.12 லட்சம் பேர் எழுதிய நிலையில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 93.76% ஆகும். பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 8.55% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 97.95 % மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து உள்ளது. 97.27 % மாணவர்கள் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 2-வது இடம் பிடித்து உள்ளது. 97.02 % மாணவர்கள் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3வது இடம் பிடித்து உள்ளது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கன்னியாகுமரி மாவட்டம் முதல் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் 2-ம் இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 3ம் இடத்தையும் பிடித்து உள்ளது.
பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்டில் உடனடி தேர்வு நடைபெற உள்ளது. 12ம் வகுப்பிற்கு ஜூலை 25ம் தேதி முதல் உடனடி தேர்வு தொடங்கும் என்றும் 10ம் வகுப்பிற்கு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் உடனடி தேர்வுகள் துவங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM