காங்கிரஸ் கட்சி பாதுகாப்பு படைக்கு புதிதாக ஆள்களைத் தேர்வுசெய்யும் அக்னிபத் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடந்த பந்த்-க்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. ஆனால், மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும், ஜூலை மாதத்திலிருந்து அக்னிபத் திட்டத்தில் பாதுகாப்பு படைக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சுபோத் காந்த் சஹாய் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்திருக்கிறார். சுபோத் காந்த் சஹாய் இது தொடர்பாக அளித்த பேட்டியில், “ஹிட்லரைப் போல நடந்து கொள்பவர்கள் அவரைப்போல் தான் இறப்பார்கள். பிரதமர் நரேந்திர மோடியும் ஹிட்லரைப் போலதான் இறப்பார்” என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக அந்தக் கட்சியின் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ், “காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரதமரை அவமதித்திருக்கிறார். இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது காங்கிரஸ் மரபணுவில் இருக்கிறது. அனைவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கொலை வியாபாரி என்று விமர்சனம் செய்தார். இந்த வார்த்தையால் குஜராத் மக்கள் மிகவும் காயப்பட்டனர். அதனால்தான் பிரதமர் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்றார். மக்கள் மோடிமீது அன்பு வைத்திருப்பதால்தான் தொடர்ச்சியாக அவரை வெற்றி பெறச்செய்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் விரக்தி அடைந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.