10th, 12th தேர்வில் 100% தேர்ச்சி: தடைகளைக் கடந்து சாதிக்கும் தஞ்சை பார்வையற்றோர் பள்ளி

100% result by visually challenged students in class X and XII Exams: தஞ்சாவூர் மேம்பாலம் அருகே செயல்பட்டு வரும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பார்வைத்திறன் குறையுடையோருக்கான இந்தச் சிறப்பு பள்ளியில் பிரெய்லி வழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், இப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை. ஏனைய பிற ஆசிரியர்கள் தான் அவ்விரு பாடங்களையும் நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: 10th, 12th Results: அரசுப் பள்ளிகள் அபாரம்; திருச்சி தேர்ச்சி நிலவரம்!

இந்தச் சூழ்நிலையிலும், இப்பள்ளி மாணவ, மாணவியர் கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வைத்திறன் குறையுடையோருக்கான இந்தச் சிறப்பு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை மொத்தம் 143 பேர் படித்து வருகின்றனர். அவர்களில் மாணவியரின் எண்ணிக்கை 42. ஆனால் இங்குள்ள ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை 6. அவர்களில் 2 பேர் மட்டுமே முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 3 பேர் பட்டதாரி ஆசிரியர்கள், ஒருவர் இடைநிலை ஆசிரியர்.

பிளஸ் டூ வரை வகுப்புகள் உள்ள இந்தப் பள்ளியில் ஆங்கிலம், வரலாறு ஆகிய இரு பாடங்களுக்கு மட்டுமே முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட ஏனைய பாடங்களை இப்பள்ளியில் பணிபுரியும் ஏனைய பட்டதாரி ஆசிரியர்களே நடத்தி வருகின்றனர். ஸ்கிரீன் ரீடிங் சாப்ட்வேர் மூலம் தாங்களாகவே கணினி கற்று வருகின்றனர் இப்பள்ளி மாணவர்கள்.

இந்நிலையில், வரலாறு பாடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியரும் தற்போது திருச்சிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சூழ்நிலையில், இப்பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவிகள் உள்பட மொத்தம் 28 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இந்நிலையில் இன்று வெளியான தேர்வு முடிவில் அந்த மாணவ, மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல, பிளஸ் டூ பொதுத் தேர்வில் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்தப் பள்ளியைச் சேர்ந்த 11 மாணவியர் உள்பட மொத்தம் 32 பேர் பிளஸ் டூ பொது தேர்வு எழுதியிருந்தனர். இன்று வெளியான தேர்வு முடிவில் அந்த மாணவ, மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் டூ தேர்வில் இந்தப் பள்ளியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற மாணவர் மொத்தம் 541 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து, தமிழ் என்ற மாணவி 519 மதிப்பெண்கள் பெற்றும் இரண்டாம் இடமும், ஹரிஹரன் என்ற மாணவர் 503 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

அதேபோல, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தப் பள்ளி மாணவர் ராமச்சந்திரன் 416 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து ராஜ்குமார் என்ற மாணவர் 407 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், சூர்யா என்ற மாணவர் 406 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடமும் பெற்றுள்ளனர்.

“இப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவர்கள் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகளில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இப் பள்ளியில் மாணவ, மாணவியர்க்கு பிரெய்லி வழியில் கல்வி கற்றுத் தரப்படுகிறது.

கல்வி மட்டுமின்றி, மாணவர்களின் ஏனைய திறன்களை வளர்த்து அவற்றை வெளிக்கொணரும் முயற்சியாக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, இம் மாணவர்களுக்கு யோகா கற்றுத் தரப்படுகிறது. பார்வைத்திறன் குறையுடையோருக்கான இப் பள்ளியில் மாணவர்களுக்கு இந்தியாவிலேயே முதல் முறையாக சிலம்பம் கற்றுத் தரப்படுகிறது,” என்கிறார் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சோபியா.  

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.