சென்னை: நேஷனல் ஹெரால்டு வழக்கின் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு, 4வது நாளாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஆஜனார். இதனை கண்டித்தும், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகவும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் தொண்டர்களுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் சத்தியாகிரக போராட்டம் நடத்தினர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் பங்குகளை சோனியா, ராகுல் வாங்கிய விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கின் பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராக்குல் காந்தி ஜூன் 13 ஆம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி கடந்த 13ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். 3நாட்களாக 30மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், வியாழக்கிழமையும் விசாரணைக்கு ஆஜர் ஆகும் படி ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், சோனியா காந்தியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவகாசம் கோரினார். அதை ஏற்று, 20ந்தேதி (இன்று) விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இந்த நிலையில், இன்று, ராகுல் காந்தி 4வது நாளாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் 4வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அக்னிபாத் திட்டம், ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து, காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சத்தியாகிரக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மல்லிகார்ஜுன் கார்கே, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.