புதுடெல்லி: நான்கு ஆண்டு ராணுவ சேவைக்குப் பின் அக்னி வீரர்கள் முடி வெட்டும் தொழில் செய்யலாம், பாஜ அலுவலகத்தில் வாட்ச்மேன் ஆகலாம் என பாஜ தலைவர்கள் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. அக்னிபாதை திட்டத்தின் கீழ், 4 ஆண்டு நாட்டுக்கு ராணுவ சேவை புரிந்து திரும்பிய பின் அக்னி வீரர்களுக்கு அடுத்து எப்படி சமூகத்தில் வேலை கிடைக்கும், பென்ஷன் இல்லாமல் அவர்கள் எப்படி நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்வார்கள் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த கேள்வியை எதிர்க்கட்சிகளும் அரசிடம் கேட்கின்றன. இந்நிலையில், அக்னிபாதை திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பாஜ தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களில், ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டி பேசுகையில், ‘அக்னிபாத் வீரர்களுக்கு பணிக்காலத்தில் எலக்ட்ரிஷியன், டிரைவர், முடி திருத்துதல் உள்ளிட்ட வேலைகளுக்கான திறன் பயிற்சி அளிக்கப்படும். 4 ஆண்டு சேவை முடிந்தபின் அவரவர் திறன் பயிற்சி அடிப்படையில் வேலைவாய்ப்புகளை பெறலாம்,’ என கூறி உள்ளார். பாஜ தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா ஒருபடி மேலே போய், ‘‘ஒருவேளை பாஜ அலுவலகத்தில் நான் காவலாளியை நியமிக்கிறேன் என்று வைத்துக்கொண்டால், அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு நிச்சயம் முன்னுரிமை அளிப்பேன்,’ என கூறி உள்ளார். இந்த பேச்சுகள் கடும் சர்ச்சையாகி உள்ளன.