நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் வீரர்களை சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்த்து தெரிவித்து தெலங்கானா, பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகினற்ன.
இந்த நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.
அப்போது, அமலாக்கத் துறைக்கு எதிரான போராட்டத்தின்போது காங்கிரஸ் எம்பிக்கள் மீது டெல்லி போலீசார் மோசமாக நடந்து கொண்டதாக அவரிடம் புகார் மனு அளித்தனர். மேலும், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கைவிட ஆவன செய்ய வேண்டும் என்றும் அவர்கள் குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், “அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்த தெளிவான விளக்கம் இல்லை. எனவே இந்த திட்டத்தை கைவிடுமாறு குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தி உள்ளோம்” என்று அவர் கூறினார்.