எடப்பாடி பழனிசாமிக்கு ஓ பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை ஜூலை மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று சூரியமூர்த்தி தொடர்ந்த இடைக்கால மனு நீதிபதி பிரியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வேண்டுமென்று தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் சபாநாயகர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதேசமயத்தில் ஓபிஎஸ் தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர் ராஜலட்சுமி, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளதால், இந்த கூட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு காலாவதியாகிவிட்டது என்று கருதவேண்டும் என வாதிட்டார். மேலும் ஓபிஎஸ் கடிதத்தையும் சமர்ப்பித்தார்.
அதிமுகவின் கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய பிரசாத், மனுதாரர் சூரியமூர்த்தி கட்சியினுடைய தற்போதைய உறுப்பினர் இல்லை என்று வாதிட்டார். அப்போது மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பொதுக்குழுவில் தடைவிதிக்க கோரிய வழக்கை முன் கூட்டியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற மனுதாரர் தரப்புக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நாளை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.