மத்திய அரசால் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய ராணுவ ஆள் சேர்ப்பு திட்டமான `அக்னிபத்’துக்குப் பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பிவருகின்றன. நான்காண்டுக்கால ஒப்பந்த அடிப்படையில் இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களில், 25 சதவிகித வீரர்கள் மட்டுமே நேரடியாக ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் எனக் கூறப்பட்டதால், மீதமிருக்கும் 75 சதவிகித வீரர்களின் வாழ்வாதாரம் குறித்து கேள்வியெழுப்பி பலரும் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில், இந்தத் திட்டத்திலிருந்து நான்கு ஆண்டுக்காலம் பணிமுடித்துவிட்டு வெளியேறும் 75 சதவிகித வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக மனோகர் லால் தனது ட்விட்டர் பக்கத்தில், “அக்னிபத் திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகள் நாட்டுக்கு சேவை முடித்துவிட்டு திரும்பும் அக்னி வீரர்களுக்கு, ஹரியானா அரசில் உத்தரவாதத்துடன் வேலை வழங்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
மனோகர் லாலின் இத்தகைய அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ரந்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில், “கட்டர் ஜி, இளைஞர்களுக்கு இன்னொரு லாலிபாப் கொடுக்க வேண்டாம். 50% இட ஒதுக்கீட்டைத் தாண்டி மற்றொரு பிரிவை எவ்வாறு உருவாக்குவீர்கள்… இளைஞர்களை ஏமாற்றாதீர்கள், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அனைவரையும் ராணுவத்தில் வைத்திருக்க வேண்டும் என்று பிரதமரிடம் கூறுங்கள்” என விமர்சித்திருக்கிறார்.