டிஸ்பூர் : அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மொத்தம் உள்ள 35 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. நேற்று ஒரே நாளில் 11 பேர் மரணம் அடைந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், மே 2வது வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் 32 மாவட்டங்களில் உள்ள 5,000 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 47 லட்ச மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் 2 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வெள்ளத்தில் சிக்கி நேற்று ஒரே நாளில் 2 போலீசார் உட்பட 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே வெள்ள சேத மதிப்பை கணக்கிட ஒன்றிய அமைச்சரவை குழு விரைவில் அசாம் செல்லும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அங்கு மீட்புப் பணிகளில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. மேகலாயாவிலும் கனமழை பெய்து வருகிறது. அங்கு வெள்ள பாதிப்பால் 28 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதே போல் மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரியில் நேற்று இரவு கனமழை பெய்தது. 110 மில்லிமீட்டர் பெய்த கனமழையால் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.