சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம்பெற்றுள்ள நிலையில், அதிமுகவை அழிக்க சதி நடப்பதாகவும், நானே முன்னின்று காப்பேன் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சை நீடிக்கும் சூழ்நிலையில், ஆதரவு நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே இன்றும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஓபிஎஸ்-யுடன், அவரது இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். திட்டமிட்டபடி பொதுக்குழுவை கூடுவது குறித்து தம்பிதுரை, ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோருடன் ஈபிஎஸ் சென்னை பசுமை வழிசலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக ஜெ.மறைவைத் தொடர்ந்து, அதிமுக உடைந்ததும், சசிகலா ஆதரவுடன் எடப்பாடி முதல்வரானார். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்று, ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வரானார். இருந்தாலும் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் இடையே முட்டல் மோதல் நிடித்து வந்தது. இருந்தால் அதிமுக ஆட்சியை தொடர்ந்து 4 வருடம் வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.
இதையடுத்து, சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு அதிமுக தலைமைதான் காரணம் என்று அதிமுக தொண்டர்கள் குற்றம் சாட்டினர். தலைமை சரியில்லை என்றும், இரு தலைவர்களும் தனித்தனியாக அறிக்கை விடுவதும், தங்களது ஆதரவாளர்களுக்கு பதவிகளை பெறுவதில் அக்கரை காட்டுவதும் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு வரும் 23ந்தேதி கூடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுகவில் இரட்டை தலைமை வேண்டாம், ஒற்றை தலைமையே வேண்டும் என கோரிக்கை எழுந்தது. எடப்பாடிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை கோரிக்கையை முன் வைத்தனர். ஆனால், இதை ஏற்க ஓபிஎஸ் தரப்பு மறுத்து விட்டது. இரட்டை தலைமைதான் தொடரவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இதனால், இரு அணிகளுக்கும் இடையே தீவிரமான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பொதுக்குழுவில் ஒற்றை தீர்மானத்தை ஆதரிக்க எடப்பாடிக்கு 2300 பேர் ஆதரவு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனால், ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என எடப்பாடிக்கு கடிதம் எழுதி உள்ளதுடன், நீதிமன்றத்திலும் புகார் அளித்துள்ளது.
அ.தி.மு.க.வில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதால் அந்த அணியினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடிக்க ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வானகரம் திருமண மண்டபத்துக்கு சென்று பொதுக்குழு கூட்டத்தை எப்படி நடத்துவது என்று ஆய்வு செய்தனர். இன்றும் அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களில் யார், யாரை எந்தெந்த பகுதிகளில் அமர வைக்க வேண்டும் என்று ஆய்வு செய்தனர். இதனால் 23-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடுவது உறுதியாகி இருக்கிறது.
இதன் அடிப்படையில் ஏற்கனவே திட்டமிட்டப்படி தீர்மானக்குழு வரையறுத்துள்ள தீர்மானங்களை பொதுக்குழுவில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவு செய்து உள்ளனர். அப்போது ஒற்றைத்தலைமை தீர்மானமும் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. குறிப்பாக பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பதவிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், நேற்று அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் மத்தியில் பேசிய அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சா, அதிமுகவை வீழ்த்த சிலர் முயற்சிக்கின்றனர். அதற்கான சூழ்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த சூழ்ச்சிகளை நாங்கள் முறியடிப்போம் என்றவர், அதிமுகவை யாராலும் அழிக்க முடியது. நானே முன்னின்று அதிமுகவை காப்பேன் என்றும், பலம் வாய்ந்த கட்சியான அதிமுக, வீழ்ந்ததாக சரித்திரமே இல்லை என்றும் ஆவேசமாக கூறினார்.
ஒற்றை தலைமைக்குறித்து, அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றும் நிலையில் ஓ.பன்னீர் செல்வம் டம்மியாக்கப்படுவார் என்பது உறுதியாகி உள்ளது. இதற்கிடையில் சசிகலாவும் தன் பங்குக்கு அதிமுகவில் கலகத்தை ஏற்படுத்த முயற்சித்த வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இதனால், 23ந்தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கலவர பூமியாக மாறவும் வாய்ப்பு உள்ளது என்பதை மறுத்துவிட முடியாது.