சர்வதேச யோகா தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட யோகாசன சங்கம் ஆகியவை சார்பாக அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டார்.
இது தவிர, கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிலும் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாழையூத்து அருகே உள்ள நாரணம்மாள்புரம் பகுதியில் உள்ள கேன்பிரிட்ஜ் பள்ளியில் நடந்த யோகாசன நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார்.
பள்ளி மாணவர்களுடன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவர் பாலாஜி நாகேந்திரன், மாவட்ட பா.ஜ.க தலைவர் தயா சங்கர், மாநில மகளிரணி செயலாளர் தீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களும் ஆர்வத்துடன் யோகாசனம் செய்தார்கள்.யோகாசனத்தில் மூன்று டாக்டர் பட்டம் மற்றும் இளம் வயதிலேயே யோகா ஆசிரியர் உள்ளிட்ட சாதனைகள் புரிந்த சிறுமி பிரிஷாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, “நமது நாட்டின் பாரம்பரியம், கலாசாரம் காரணமாக உலக நாடுகள் இந்தியாவைத் திரும்பிப் பார்க்கின்றன. காங்கிரஸ் கட்சி தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது. அக்னிபத் திட்டம் மிகவும் அற்புதமான திட்டம். தமிழகத்தில் இதை எதிர்க்க திரைமறைவில் இருந்து தி.மு.க தூண்டுகிறது.
அ.தி.மு.க என்பது மிகப் பெரிய கட்சி. ஏழை, எளிய மக்களுக்காக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம். ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட கட்சி. அந்தக் கட்சியின் தலைமைக்குத் தகுதியுள்ளவர்கள், திறமையுள்ளவர்கள், கட்சித் தொண்டர்களுக்குப் பிடித்த ஒருவர் வரவேண்டும்.
அ.தி.மு.க கட்சி விதி 20-ன் படி கூட்டத்தில் எல்லா சிறப்பு அழைப்பாளர்களும் கலந்துகொள்ள வேண்டும். அதாவது டவுன் பஞ்சாயத்து செயலாளர் முதல் அனைத்து சிறப்பு அழைப்பாளர்களும் எல்லாக் காலங்களிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் சிறப்பு அழைப்பாளர்கள் நிச்சயமாக அழைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், அந்தக் கட்சியைக் கட்டிக்காக்கத் தகுதியான, திறமையான தலைமை வேண்டியது அவசியம்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.