அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணியில் அவரை சேர்த்திருக்க வேண்டும் – சுனில் கவாஸ்கர்

புதுடெல்லி,

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி அந்த அணிக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதல் போட்டி 26-ந் தேதியும், 2-வது ஆட்டம் 28-ந் தேதியும் நடைபெறுகிறது. இந்திய அணியில் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஆர் பிஷ்னோய், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் ராகுல் திவேதியாவின் பெயர் இடம்பெறவில்லை. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக ராகுல் திவேதியா சிறந்த பங்களிப்பை வழங்கி இருந்தார். இந்த நிலையில் ராகுல் திவேதியா குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.

திவேதியா தொடர்பாக கவாஸ்கர் பேசியதாவது :

திவேதியா, சிறந்த வீரர். சில சமயங்களில் 15 பேருக்குப் பதிலாக கூடுதலான வீரர்களை அழைத்து செல்லலாம். ஒரு கூடுதல் வீரர்களை சேர்த்து கொள்ளுங்கள். ஏனென்றால் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் வீரர்களை அணியில் சேர்க்காமல் இருப்பது கடினமான முடிவு.

ஐபிஎல்-லில் தோல்வியின் பிடியில் இருந்த போட்டிகளில் கூட திவேதியா வெற்றியை தேடி தந்துள்ளார். அந்த மாதிரியான சுபாவத்தை காட்டுபவர்களை 16வது நபராக அயர்லாந்திற்கு அழைத்துச் செல்லலாம். இன்னும் சற்று கடினமாக அவர் உழைத்தால் நிச்சயம் இந்திய அணியில் இடம்பெறலாம்.

இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.