சென்னை: “அரசியல் காரணங்களுக்காகத் தற்கொலையைப் போற்றும் சிலரின் கருத்தை பின் தள்ளுங்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், “அரசியல் காரணங்களுக்காகத் தற்கொலையைப் போற்றும் சிலரின் கருத்தை பின் தள்ளுங்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை என்ற செய்திகள் மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.
தோல்விக்கு விடை தற்கொலை ஆகாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது, அந்த தனித்தன்மையை உணர்ந்து நீங்கள் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
அரசியல் காரணங்களுக்காகத் தற்கொலையைப் போற்றும் சிலரின் கருத்தை பின் தள்ளிவிட்டு நீங்கள் முன்னேறவேண்டும். முயற்சி திருவினையாக்கும்!” என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.