கடந்த 2014-ம் ஆண்டு காவலர் குடியிருப்பிலிருந்து மாணிக்கவேல் என்பவரை காலி செய்வது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அவரை காலி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இருந்தபோதிலும், அவர் சமீபத்தில்தான் குடியிருப்பை காலி செய்தார். மாணிக்கவேல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையில், தமிழ்நாடு அரசுக்கு ஆர்டர்லி முறையை நிறுத்துவது குறித்து நீதிபதி கேள்வியெழுப்பியிருந்தார். இதற்குத் தமிழ்நாடு அரசு சார்பில், `ஆர்டர்லி முறை குறித்து உடனடி கவனம் கொள்ளவேண்டும் என்று உள்துறை செயலாளர் தமிழ்நாடு டி.ஜி.பி-க்கு கடிதம் எழுதியுள்ளார். அதோடு, முதலமைச்சர் காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். ஆர்டர்லி முறையைத் தொடரும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதில் கூறப்பட்டது.
அப்போது பேசிய நீதிபதி, “ஓராண்டு பயிற்சி முடித்து 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் காவலர்களை அதிகாரிகளின் தனிப்பட்ட காரணத்துக்காகப் பயன்படுத்துவது குற்றமாகும். அவர்கள் படித்தொகையைப் பெற்றுக்கொண்டு, உதவியாளர்களை நியமித்துக்கொள்ளலாம். ஆர்டர்லிக்களை பயன்படுத்தும் அதிகாரிகள்மீது வழக்கு தொடரவேண்டும். முன்னாள் அதிகாரிகளின் வீட்டில் உள்ள ஆர்டர்லிக்களை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். அரசியல்வாதிகளும், காவல்துறையினரும் கூட்டுச்சேர்ந்துகொண்டு செயல்படுவது அழிவுக்குக் கொண்டுசெல்லும்” என்று கூறினார்.
மேலும், “காவல்துறையினர், அரசியல்வாதிகளுக்குப் பரிசும், பூங்கொத்தும் கொடுப்பது தவறு என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். இவையெல்லாம் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பளிக்கும். மற்றவர்களின் வாகனங்களில் உள்ள கருப்பு ஸ்டிக்கரை அகற்றிவிட்டு, காவல்துறை உயரதிகாரிகளின் வாகனங்களில் உள்ள கருப்பு ஸ்டிக்கரை மட்டும் அனுமதிப்பதை என்னவென்று சொல்வது?” எனக் கேள்வியெழுப்பிய நீதிபதி, அரசு தரப்பின் விளக்கம் திருப்தி அளிப்பதாகக் கூறி வழக்கு விசாரணையை வரும் ஜூலை 25-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.