அரசு கலை & அறிவியல் கல்லூரி சேர்க்கை; விண்ணப்பம் செய்வது எப்படி?

Tamilnadu Arts and Science college admission 2022 online application starts: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பச் செயல்முறை நாளை (ஜூன் 22) முதல் ஆன்லைனில் தொடங்குகிறது.

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று (ஜூன் 20) வெளியான நிலையில், மாணவர்களும் பெற்றோர்களும் அடுத்து என்ன படிக்கலாம் என திட்டமிட்டு வருகின்றனர். மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற படிப்புகளைப் போலவே, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்கும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகளில் குறைந்து வரும் மோகம், அப்படி கலை மற்றும் அறிவியல் படிப்புகளின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் இந்தப் படிப்புகளுக்கும் போட்டி கடுமையானதாக இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: TNEA 2022: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை; விண்ணப்பம் செய்வது எப்படி?

கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் அரசு மற்றும் சில தனியார் கல்லூரிகளுக்குத் தான் மாணவர்களிடையே போட்டி இருந்து வருகிறது. பெரும்பாலான மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை, விருப்பமான கல்லூரிகளில் படிக்க கடுமையாக போட்டியிட வேண்டிய நிலை இருந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில், இளங்கலை இயற்பியல், கணிதம், கணினி அறிவியல், மற்றும் வணிகவியல் படிப்புகளில் சேர மாணவர்களிடையே அதிக ஆர்வம் இருந்து வருகிறது.

இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், B.A, B.Sc, B.Com, BBA, BCA உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் சேர்க்கை பெற விண்ணப்பிப்பதற்கான தேதியை மாற்றம் செய்து, அதாவது ஜூன் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தகுதிகள்

மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

முதலில் http://www.tngasa.in அல்லது http://www.tngasa.org என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று, உங்கள் பெயர், தொலைப்பேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல்களைக் கொண்டு முதலில் பதிவு செய்ய வேண்டும்.

தற்போது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் கொண்டு, விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இதில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள், முகவரி, கல்வி விவரங்கள் உள்ளிட்டவற்றை உள்ளிட வேண்டும்.

பின்னர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் : 22.06.2022

விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.07.2022

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் : ரூ.48

பதிவுக் கட்டணம் : ரூ. 2

SC/SCA/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. ஆனால் பதிவுக் கட்டணம் ரூ. 2 செலுத்த வேண்டும்.

மேற்கூறிய கட்டணங்கள் ஒரு கல்லூரிக்கான விண்ணப்பக் கட்டணங்களாகும். இந்த விண்ணப்பக் கட்டணங்களை ஆன்லைன் வாயிலாகவே மாணவர்கள் செலுத்திக் கொள்ளலாம்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) வழியாக விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.