ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மாயம்?! – மகாராஷ்டிரா அரசுக்கு நெருக்கடி

மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நடந்த ராஜ்ய சபை தேர்தல், சட்டமேலவைத் தேர்தலில் சிவசேனா தலைமையிலான மகாவிகாஷ் அகாடியை தோற்கடித்து பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. நேற்று நடந்த சட்டமேலவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் பாஜக-வுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இத்தேர்தல் முடிவு சிவசேனா கூட்டணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

அதோடு இத்தேர்தலில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் கட்சி மாறி பாஜக-வுக்கு ஆதரவாக வாக்களித்து இருப்பதும் இப்போது தெரிய வந்துள்ளது. அவ்வாறு கட்சி மாறி வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களை இப்போது தொடர்பு கொள்ள முடியவில்லை என்கிறார்கள். அவர்கள் அனைவரும் சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் குஜராத் மாநிலம் சூரத்தில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சிவசேனா

அமைச்சர் உட்பட எம்.எல்.ஏ.க்களை காணவில்லை என்றவுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று நள்ளிரவு வரை கட்சித் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். கட்டுக்கோப்பான கட்சியாக கருதப்பட்ட சிவசேனாவில் இருந்து பாஜக-வுக்கு எம்.எல்.ஏ-க்கள் தாவ முடிவு செய்திருப்பது சிவசேனாவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இன்று பிற்பகல் 12 மணிக்கு உத்தவ் தாக்கரே மீண்டும் கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார். ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சென்றுள்ள ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் மூத்த தலைவராக திகழ்ந்து வருகிறார்.

மும்பையையொட்டி இருக்கும் தானேயில் சிவசேனாவின் தூணாக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே சமீப காலமாக கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டேயின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையை சுதந்திரமாக நடத்த உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே அனுமதிக்கவில்லை என்றும், கட்சியில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டதாகவும் ஏக்நாத் ஷிண்டே வருத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் செயல்பாடுகளில் அதிருப்தியில் இருந்தனர்.

மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை முதல்வர் அஜித் பவார், தொகுதிகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர். சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இவ்விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும் என்று விரும்பினர். ஆனால் இவ்விவகாரத்தில் தலையிட்டால் கூட்டணி கட்சிகளின் பகையை சம்பாதிக்க வேண்டி வரும் என்று கருதி இவ்விவகாரத்தில் உத்தவ் தாக்கரே தலையிடாமல் ஒதுங்கி இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாஜக மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல முறை ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு தோல்வியை சந்தித்த பாஜக, இப்போது மீண்டும் களத்தில் இறங்கி இருக்கிறது. இதற்கு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருக்கின்றனர்.

உத்தவ்தாக்கரே

சிவசேனாவில் 56 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்றால்தான் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 53 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 44 எம்.எல்.ஏ.க்களும் இருக்கின்றனர். மொத்தமுள்ள 288 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் இறந்துவிட்டார். இரண்டு பேர் சிறையில் இருக்கின்றனர். சுயேச்சை மற்றும் சிறிய கட்சி எம்.எல்.ஏ.க்கள் 29 பேர் இருக்கின்றனர். அவர்களில் 8 பேர் சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். பாஜக-வுக்கு 7 பேர் ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் சிவசேனா எம்.எல்.ஏ ஒருவர் இறந்துவிட்ட நிலையில், கூட்டணிக்கு 150 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது. இதில் சிவசேனாவில் இருந்து 11 பேர் பாஜக பக்கம் சென்றுவிடும் பட்சத்தில் அரசு பெரும்பான்மையை இழந்துவிடும். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களும் பாஜக பக்கம் தாவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது. இதனால் ஆட்சியை எப்படி காப்பாற்றுவது என்ற சங்கடத்தில் உத்தவ் தாக்கரே இருக்கிறார். இது குறித்து சிவசேனாவில் இருந்து விலகி பாஜக-வில் சேர்ந்து மத்திய அமைச்சராகி இருக்கும் நாராயண் ராணே கூறுகையில், “என்ன காரணத்திற்காக எம்.எல்.ஏ.க்கள் காணாமல் போய் இருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளாமல் கருத்து கூறக்கூடாது” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.