சென்னை: “ஆரோக்கியமான உடல், நிலையான மனம், ஒருமித்த உணர்வு என்பவை யோகாவின் சாராம்சம்” என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ஏ.நாராயணசாமி கூறியுள்ளார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை இன்று (ஜூன் 21) தொடங்கிவைத்து மத்திய இணையமைச்சர் ஏ.நாராயணசாமி பேசியது: ”தியானம், கர்மா, பக்தி ஆகியவற்றின் கலவையாக யோகா விளங்குகிறது.
பிரதமர் மோடியின் மகத்தான முயற்சியால் இந்தியாவின் பெருமை மிகு பாரம்பரிய யோகா 2014 டிசம்பர் 11 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்தை பெற்றது. இந்நாளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் யோகா சர்வதேச அங்கீகாரத்தை பெற்றது
இந்த ஆண்டு சுதந்திரத்தின் 75 வது ஆண்டு பெருவிழா கொண்டாடப்படும் நிலையில், நாடு முழுவதும் வரலாற்று சிறப்புமிக்க 75 இடங்களில் யோகா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த வகையில், உலக பிரசித்தி பெற்ற மாமல்லபுரத்தில் திரளான மக்கள் பங்கேற்புடன் யோகா பயிற்சி நடைபெறுகிறது.
மனிதகுலத்திற்கான யோகா என்பது இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் மையப்பொருள். மக்களிடையே கருணை, இரக்கம், ஒருமைப்பாடு, உடல் ஆரோக்கியம், மனநலம் போன்றவற்றை உருவாக்குவது இந்த மையப்பொருளின் நோக்கமாகும்.
நாட்டின் முதன்மை சேவகராக கடந்த எட்டு ஆண்டுகளாக மோடி ஓய்வின்றி உழைத்து வருகிறார். அவரது உழைப்புக்கு உறுதுணையாக உடல் ஆரோக்கியம் இருப்பதற்கான ரகசியம் யோகாபயிற்சியே. நவீன கால வாழ்க்கை முறையால் ஏற்படும் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தீர்வாக யோகா பயிற்சி அமைகிறது ” என்று பேசினார்
தேசிய சித்தா நிறுவனத்தின் ஆதரவுடன் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சித்தா நிறுவனத்தின் இயக்குனர் ஆர். மீனாகுமாரி, சென்னை கலங்கரை விளக்கம் மற்றும் விளக்குக் கலங்கள் இயக்குனரக இயக்குனர் கார்த்தி்க் செஞ்சுடர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.