ஈரோடு அரசு மருத்துவர்கள் இருவர் சஸ்பெண்ட்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நாமக்கல்: ஈரோடு அரசு மருத்துவமனையில் பணி நேரத்தின்போது பணியில்லாத மருத்துவர் மற்றும் மகனை மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதித்த மருத்துவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போதைமலைக்கு உட்பட்ட மலைக் கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:”கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சமானப்பள்ளி எனும் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள மலைகிராம மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவர். டயாலிஸ் போன்ற பல்வேறு நோய்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 50 லட்சம் பயனாளிக்கு சித்திரப்பாக்கம் என்ற கிராமத்தில் மருந்துப் பெட்டகம் தரப்பட்டது.

கடந்த இரு மாதங்களுக்கு முன் மதுரை அருகே உள்ள கிராமத்தில் 60வது லட்சம் பயனாளிக்கு மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது. தற்போது 75 லட்சம் பயனாளிக்கு நாமக்கல் மாவட்டம் போதைமலைக்கு உட்பட்ட கெடமலை என்ற மலைக் கிராமத்தில் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. 75 லட்சம் பயனாளிகள் என்பது ஒரு மகத்தான சாதனை. ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சண்முகவடிவு, பணி நேரத்தின்போது பணியில்லை. அதுபோல் மருத்துவர் தினகரன் என்பவரது மகன் அஸ்வின் என்பவரும் மருத்துவர். இவர் அரசு மருத்துவர் கிடையாது. எனினும், தந்தையின் பணியை அவர் மேற்கொண்டுள்ளார்.

இவரும் தங்களது குடும்பத்துடன் பணி நேரத்தின்போது ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்று குதூகலித்ததாக கூறப்படுகிறது. அது அவர்களது சொந்த விஷயம். எனினும், பணி நேரத்தின்போது பணியில் இல்லை என்பது குற்றச்சாட்டு. இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவியது. இதையடுத்து துறையினர் செயலாளர் சம்மந்தப்பட்ட மருத்துவ அலுவலரை தொடர்பு கொண்டு ஆய்வு செய்யும்படி உத்திரவிட்டார். விசாரணையில் இரு மருத்துவர்களின் செயல்பாடு உண்மையென தெரியவந்தது. இதையடுத்து இரு மருத்துவர்களும் நேற்று முன்தினம் இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தவிர, துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது.

மத்திய அரசின் அனுமதி நெறிமுறைகள் தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன் மருத்துவ படிப்புகளுக்கு வி்ண்ணப்பிப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ராணுவம் என்பது நாட்டின் உயரிய பணி. இதில் ஒப்பந்த அடிப்படை நியமித்தால் நாட்டுப்பற்றெல்லாம் பெரிதாக இருக்காது என்பது ராணுவத்தில் பணிபுரிந்தவர்களின் கருத்தாக உள்ளது. எனவே இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.

மருத்துவத்துறையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டுமென நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக 1021 மருத்துவப் பணியிடங்கள் உள்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் எம்ஆர்பி மூலம் நியமனம் செய்யப்பட உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. எப்படியும் செப்டம்பர் மாத இறுதிக்குள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் எம்ஆர்பி மூலம் நிரப்பப்படும். நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணி மேற்கொள்ள என மொத்தம் ரூ.17 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டவுடன் அங்கு மருத்துமவனை செயல்பாட்டுக்கு வரும். நாமக்கல் மாவட்டத்தில் இரு மருத்துவமனைகள் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் தரம் உயர்த்தப்பட்ட ராசிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ரூ.23.50 கோடி நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்,” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.