வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மைசூரு: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மைசூரு அரண்மனை வளாகத்தில் பிரதமர் மோடி யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ‘மனித நேயத்திற்காக யோகா’ என்ற கருத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு யோகா தினம் கொண்டாடப்படுகிறது. மைசூரு அரண்மனை வளாகத்தில் நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவருடன் 15 ஆயிரம் பேர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் சர்பானந்த்த சோனோவால் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நல்ல உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் யோகா வழிகாட்டுகிறது. நாள்தோறும் யோகா செய்தால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். உலக நாடுகளையும், மக்களையும் யோகா ஒன்றிணைக்கிறது. கோவிட் காலத்தில் நல்ல ஆரோக்கியத்திற்கு வழிகாட்டியது. உலகின் அனைத்து பகுதிகளையும் யோகா சென்றடைந்துள்ளது. இந்த ஆண்டின் கருப்பொருள் மனித நேயத்திற்கான யோகா. இந்த நாளில், ஐ.நா., மற்றும் அனைத்து நாடுகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். பின், 15 ஆயிரம் பேருடன் இணைந்து, பிரதமர் மோடி யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
மேலும், நாடு முழுவதும், 75 மத்திய அமைச்சர்கள், நாட்டின் 75 முக்கிய நகரங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். டில்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.
Advertisement