பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று பெங்களூரு வந்தார். அங்கு யஷ்வந்த்பூர் ரயில் நிலையம், பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் மற்றும் புறநகர் ரயில் திட்டம் ஆகியவற்றுக்கான ரூ.27,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார்
தவிர பெங்களூருவில் மூளை ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைத்தார். பின்னர் கர்நாடகாவில் செயல்படுத்தப்பட்டு வரும் 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், 7 ரயில்வே திட்டங்கள், அண்மையில் திறக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையம் தொடர்பான பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். இதையடுத்து மாலையில் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தையும், அம்பேத்கரின் சிலையையும் திறந்து வைத்தார்.
பின்னர் பெங்களூரு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
கர்நாடகாவில் தொடங்கப்பட்டுள்ள ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களால் கர்நாடக மக்கள் பெரிதும் பயனடைவார் கள். கர்நாடகா முழுமையான வளர்ச்சிப்பெற்ற மாநிலமாக மாறும் நாள் நெருங்கி வருகிறது. புறநகர் ரயில் திட்டங்களால் பெங்களூருவில் போக்குவரத்து வெகுவாக குறையும்.
ரயிலைப் பற்றி சிந்தித்திராத மக்களுக்கும் ரயில் சேவையை கொண்டு சென்றிருக்கிறோம். விமான நிலையங்களுக்கு இணையான பயண வசதிகளை ரயில்வே துறையும் வழங்க தொடங்கியுள்ளது. அதற்கு விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையம் நேரடிச் சான்றாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மைசூரு சாலையில் மோடி பயணித்தபோது அங்கு திரண்டிருந்த பாஜகவினர் அவரை வாழ்த்தி முழக்கம் எழுப்பினர். அதனால் காரின் கதவை திறந்து முகப்பில் நின்றவாறு தொண்டர்களை நோக்கி கையசைத்து உற்சாகமூட்டினார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசினார். அவர் கூறும்போது, ‘‘இப்போது சில திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தாலும், இந்த நேரத்தில் அரசின் சில முடிவுகள் முதலில் நியாயமற்றதாகத் தோன்றினாலும், பின்னர் அந்த திட்டங்கள் தேசத்தைக் கட்டமைக்க உதவியாக அமையும்” என்றார். இருப்பினும் பிரதமர் மோடி தனது உரையின்போது அக்னி பாதை திட்டம் குறித்து நேரடியாகக் குறிப்பிடவில்லை.
இந்தி எழுத்து அழிப்பு
பெங்களூரு சென்ற பிரதமர் மோடியை வரவேற்க இந்தி, ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தியில் வரவேற்பு பதாகை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்பினர், இந்தி எழுத்துக்களின் மீது கருப்பு மை பூசி அழித்தனர். ஆர்.ஆர்.நகர், விஜயநகர், மைசூரு சாலையில் இருந்த இந்தி பதாகைகளை கன்னட அமைப்பினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.