பாராளுமன்றத்தை இவ்வாரத்தில் இன்றும் (21) நாளையும் மாத்திரம் கூட்டுவதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (21) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை ஜூன்21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூட்டுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தில் முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும், தற்போதைய நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன், எதிர்க்கட்சியினர் இவ்வார பாராளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிப்பதாக அறிவித்தமையால் நாளை (22) எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்படவிருந்த நாட்டின் தற்போதைய சுகாதாரத் துறையின் பிரச்சினைகள் குறித்த சபை ஒத்திவைப்புப் பிரேரணை, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தரப்பில் அமர்ந்துள்ள சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினால் கொண்டுவரப்படுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
நாளையதினம் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் ஜூலை 04ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது. பல்வேறு காரணங்களால் பாராளுமன்றத்தில் கேட்கப்பட முடியாது போன 50 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக அன்றையதினம் 10.00 மணி முதல் பி.ப 3.30 மணிவரையான முழு நேரமும் ஒதுக்கப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.