புதுடெல்லி: ‘எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’ என குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவருக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு திரௌபதி முர்மு பெயர் அதிகாரபூர்வ குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஜூலை 18ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஏற்கனவே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டார். இப்போது பாஜகவும் தரப்பு வேட்பாளரை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பின் திரௌபதி முர்மு அளித்த பேட்டியில், “எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, என்னால் நம்ப முடியவில்லை. இந்த கட்டத்தில், அதிகம் பேச விரும்பவில்லை நன்றியுள்ளவனாக இருக்க கடமைப்பட்டுள்ளேன்.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு என்ன அதிகாரங்கள் இருந்தாலும், நான் அதற்கேற்ப செயல்படுவேன். தேர்தலில் வெற்றிபெற அனைத்துக் கட்சிகள், மாநிலங்கள் ஆதரவைக் கோருகிறேன். எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை நான் பெறுவேன்” என்று தெரிவித்துள்ளார்.