எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் எரிபொருள் இல்லாமல், எரிபொருள் வரிசையில் காத்திருந்து பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
எரிபொருள் ஏற்றிவரும் கப்பல்
இந்த நிலையில் பெட்ரோல் ஏற்றி வரும் கப்பலொன்று எதிர்வரும் 24ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த கப்பலில் 35,000 மெட்ரிக் டன் பெட்ரோலை ஏற்றி வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கைக்கு மற்றுமொரு எண்ணெய் கப்பல் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னரான நாட்களில் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக நாட்டில் கல்வி நடவடிக்கைகள், அரச மற்றும் தனியார் துறையினரின் பணி நடவடிக்கைகள், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாரிய சவாலுக்கு முகம்கொடுத்துள்ளதுடன், பாதிப்பினையும் எதிர்நோக்கியுள்ளன.
இவ்வாறான நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் குழப்பங்களை ஏற்படுத்தினால் அந்த நிலையத்தில் எரிபொருள் விநியோகம் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.