நியூயார்க்:”ஆரோக்கியமான மற்றும் வளமான எதிர்காலத்தை தரும், ஒற்றுமையை ஏற்படுத்தும் வலிமை யோகாவுக்கு உள்ளது,” என, ஐ.நா., பொது சபையின் தலைவர் அப்துல்லா ஷாகித் தெரிவித்தார்.
எதிர்காலம்
எட்டாவது சர்வதேச யோகா தினம் நேற்று உலகெங்கும் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா., சபையில், இதற்கான ஏற்பாடுகளை, ஐ.நா.,வுக்கான இந்தியத் துாதர் டி.எஸ். திருமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார்.பல நாடுகளின் துாதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில், ஐ.நா., பொது சபையின், 76வது கூட்டத்தின் தலைவராக உள்ள, மாலத்தீவின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது:உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட மன ரீதியிலான பாதிப்புகள் மற்றும் உடல் ரீதியிலான பாதிப்புகளுக்கு சிறந்த மருந்தாக யோகா உள்ளது. இந்தாண்டு யோகா தினம், மனிதநேயத்துக்கான யோகா என்ற தலைப்பில் கொண்டாட படுவது மிகவும் பொருத்தமானது.
மக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் வளமான எதிர்காலத்தை தரும் ஒற்றுமையை ஏற்படுத்தும் வலிமை யோகாவுக்கு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.சர்வதேச யோகா தினத்தையொட்டி உலகெங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மக்கள் பொதுவெளிகளில் யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.
ஆர்வம்
கடந்த இரண்டு ஆண்டாக, கொரோனா வைரஸ் பரவலால், சர்வதேச அளவில் பொது வெளியில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. அதனால், இந்தாண்டு நடந்த நிகழ்ச்சிகளில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.சீனா, பிரிட்டன், அமெரிக்கா என, பல நாடுகளிலும், இந்தியத் துாதரகங்கள் சார்பில், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Advertisement