“ஒற்றைத் தலைமைக்கு இபிஎஸ் வருவதை தடுப்பதுதான் ஓபிஎஸ் நோக்கம்” – ஜெயக்குமார்

சென்னை: “தமிழகம் முழுவதும் அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற எழுச்சி உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு ஒற்றைத் தலைமைக்கு வரவேண்டும் என்ற எழுச்சி உள்ளது. இந்தச் சூழ்நிலையில், இதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றங்களுக்கு செல்வதும், கடிதம் எழுதுவதும், இதை எந்தவொரு அதிமுக தொண்டனும், நிச்சயமாக ஏற்கமாட்டான்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பொதுக்குழு திட்டமிட்டப்படி 23-ம் தேதி நடைபெற வேண்டும். இதற்காக பொதுக்குழு உறுப்பினர்களே 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கடிதம் கொடுத்துள்ளனர். அதில் கண்டிப்பாக பொதுக்குழு நடத்தியாக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் ஒட்டுமொத்தமாக ஒற்றைத் தலைமை என்ற கருத்து, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக மேல்மட்டத்திலிருந்து, கீழ்மட்டம் வரை எல்லோராலும் ஏற்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதன் மூலம், அதிமுகவில் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்ற கருத்து, முழுமையாக நூறு சதவீதம் ஏற்றக்கொள்ளப்பட்டது என்பதை ஆணித்தரமாக சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

கடிதம் எழுதுவது புது முறையாக உள்ளது. இது வழக்கத்துக்கு மாறான முறை இது. கடிதம் எழுதும் முறை தவறு. அந்தக் கடிதத்துக்கு இபிஎஸ் தற்போது பதிலளித்துள்ளார். ஆனால், ஓபிஎஸ் எழுதிய கடிதம் எப்படி பத்திரிகைகளில் கசிந்தது? இங்கு வந்து கடிதம் கொடுத்துவிட்டு, பத்திரிகையில், ஒரு கட்சியின் ரகசியத்தை, கட்சியின் நலன் பாதிக்கின்ற வகையில் எப்படி ஊடகங்களுக்கு கொடுக்கலாம். அது நியாயமா? அதிமுகவில் கடைபிடிக்கப்பட்ட வழிமுறைகளா?

செல்போன் பேசியிருக்கலாம், யாரையாவது அனுப்பி பேசியிருக்கலாம். ஒரு கருத்து ஒருமித்தல் வருகின்ற நேரத்தில், இதுபோல ஒரு கடிதம் எழுதி, அதை வேண்டுமென்றே ஊடகங்களில் கசிய செய்தால், ஓபிஎஸ்ஸுக்கு என்ன உள்நோக்கம் இருக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிமுகவைப் பொறுத்தவரை தமிழகம் முழுவதும் எழுச்சியாக உள்ளது. ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற எழுச்சி. எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமைக்கு வரவேண்டும் என்ற அந்த எழுச்சி. இந்தச் சூழ்நிலையில், இதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற அந்தவொரு எண்ணத்தோடு நீதிமன்றங்களுக்கு செல்வதும், கடிதம் எழுதுவதும், இதை எந்தவொரு அதிமுக தொண்டனும், நிச்சயமாக ஏற்கமாட்டான்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.