புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், இன்று எடப்பாடி கே பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில்,
“இன்றுவரை மரியாதைக்குரிய ஓபிஎஸ் அவர்கள்தான் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்துப் பேசுவது தவறான ஒன்று. இது கட்சியினுடைய விதிகளுக்கு புறம்பானது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூட கட்சியிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி என்பவரை ஓபிஎஸ் அவர்கள் வீட்டில் சந்தித்து பேசியது தவறு. புகழேந்தி ஒரு அரசியல் புரோக்கர். டிடிவி தினகரன் அணியில் அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது வெறும் 343 வாக்குகள் தான் அவர் பெற்றிருந்தார்.
அவர் எடப்பாடி கே பழனிசாமி குறித்து பேட்டி அளித்திருக்கிறார். அவர் கட்சியில் இருந்து நீக்க போது, அவர் ஓபிஎஸ் எதிராக கருத்துகளை தெரிவித்து இருந்தார். அப்போது கூட நான்தான் ‘எங்கள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை குறை சொல்ல நீ யார்’ என்று கண்டனம் தெரிவித்து இருந்தேன்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன், தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடத்தக்கூடிய மரியாதைக்குரிய முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவரிடம் ஆசி பெற்று, பின்னர் வெளியே வந்து ‘தமிழகத்தில் முதல்வர் ஒரு நல்லாட்சியை கொடுத்துள்ளார்’ என்று சொல்லுகிறார். இது தவறு.
இது என்னை போன்று இருக்கின்ற லட்சக்கணக்கான தொண்டர்கள் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து தான் அடி, உதை வாங்கி அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். இன்று ஒருங்கிணைப்பாளர் மகன் ஸ்டாலினை வாழ்த்திவிட்டு வருகிறார் என்றால் என்ன அர்த்தம்? என்ன காரணம்? என்னை கேட்டால் இவர்களெல்லாம் திமுகவின் ‘பி’ டீம் என்றுதான் சொல்வேன்.
மக்கள் விரோத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகத்தை சட்டமன்றத்திற்கு உள்ளேயும், சட்டமன்றத்திற்கு வெளியேயும் எதிர்க்கக்கூடிய ஆண்மைமிக்க தலைவராக இருக்கக் கூடிய எடப்பாடியார் அவர்கள்தான் இந்த கட்சியினுடைய பொதுச்செயலாளராக வரவேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று அன்பழகன் தெரிவித்தார்.