தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆவின் நிறுவனம் சார்பில் சுமார் 152 வகையான பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தவறான தகவல்களை கூறுவதாக பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பால் முகவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு;
நாமக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஆவின் பால் பண்ணை, பால் கொள்முதல் நிலையங்கள் மற்றும் பாலகங்களின் செயல்பாடுகள் குறித்து கடந்த 18, 19, 20ம் தேதிகளில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வுகள் மேற்கொண்டார்.
ஜூன் 20 அன்று, நீலகிரி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர்; கடந்த அதிமுக ஆட்சியில் நாளொன்றுக்கு சுமார் 32 லட்சம் லிட்டர் மட்டுமே பால் கொள்முதல் செய்யப்பட்டு அதில் சுமார் 26 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டதாகவும், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று பிறகு பல்வேறு நடவடிக்கைகளால் தற்போது நாளொன்றுக்கு சுமார் 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாகவும், ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்த பிறகு கடந்த காலங்களை விட அதிகமாக அதாவது நாளொன்றுக்கு சுமார் 29 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஆவின் நிறுவனம் சார்பில் சுமார் 152 வகையான பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தவறான தகவல்களை பதிவு செய்தார். இதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
உண்மையான களநிலவரம் என்னவென்றால் கடந்த அதிமுக ஆட்சியில் நாளொன்றுக்கு 2019-2020ம் நிதியாண்டில் 33.84 லட்சம் லிட்டர், 2020-2021 நிதியாண்டில் 35.89 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021-2022ம் நிதியாண்டில் நாளொன்றுக்கு சுமார் 38.26 லட்சம் லிட்டர் மட்டுமே பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி பால் உற்பத்தி தமிழகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு, பால் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தால் தனியார் பால் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பால் கொள்முதல் விலையை சற்று உயர்த்தி வழங்கியதால், பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்கள் தனியார் பால் நிறுவனங்களை நாடத் தொடங்கினர்.
அதே சமயம் தனியார் பால் நிறுவனங்களுக்கு ஈடுகொடுத்து ஆவின் நிறுவனம் தரப்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காததால் ஆவினுக்கான பால் வரத்து மிகப்பெரிய அளவில் குறைந்தது. அதன் காரணமாகவே ஆவினில் நெய், வெண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஆவின் பால் பொருட்கள் கிடைக்காத நிலையே இன்று வரை நிலவ காரணமாக இருந்து வருகிறது.
அதுமட்டுமன்றி கடந்த அதிமுக ஆட்சியில் நாளொன்றுக்கு 2019-2020ம் நிதியாண்டில் 23.24 லட்சம் லிட்டர், 2020-2021ம் நிதியாண்டில் 24.30 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் திமுக ஆட்சியில் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட பிறகு 2021-2022ம் நிதியாண்டில் நாளொன்றுக்கு சுமார் 26.41 லட்சம் லிட்டர் மட்டுமே ஆவின் பால் விற்பனை நடைபெற்று வருகிறது. இது கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற விற்பனையோடு ஒப்பிடுகையில் திமுக ஆட்சியில் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்த பிறகு, தமிழகம் முழுவதும் வெறும் 2.11 லட்சம் லிட்டர் மட்டுமே ஆவின் பால் விற்பனை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆவினில் 152வகையான பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ள நிலையில் நெய், வெண்ணெய், தயிர், மோர், லஸ்ஸி, பனீர், பால்கோவா, ஐஸ்கிரீம், சாக்லேட், நூடுல்ஸ், குலோப்ஜாமூன், டெய்ரி ஒயிட்னர், நறுமணப்பால் உள்ளிட்ட சுமார் 46 வகையான பால் பொருட்கள் மட்டுமே ஆவினில் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது தான் உண்மையான தகவலாகும்.
மேற்கண்ட தகவல்கள் எல்லாம் கடந்த ஏப்ரல் மாதம் (13.04.2022) சட்டமன்றத்தில் நடைபெற்ற பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட பால்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இருப்பினும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தவறான தகவல்களை பொதுவெளியில் பேச வேண்டிய அவசியம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது.
மேலும் ஆவின் நிறுவனத்தில் கொள்முதல், விற்பனை செய்யப்படும் பாலின் அளவு, உற்பத்தி செய்யப்படும் பால் பொருட்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை சட்டமன்றத்தில் ஒன்றாகவும், பொதுவெளியில் மாறுபாடாகவும் பேச அமைச்சருக்கு குறிப்பெடுத்து தந்த அதிகாரிகள் ஒருவேளை அரசுக்கும், அமைச்சருக்கும் வெவ்வேறு தகவல்களை கொடுத்து ஆவினை அழிக்கவோ அல்லது ஆவின் மீதான நற்பெயரை கெடுக்கவோ சதி செய்கிறார்களோ என்கிற பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.
எனவே தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் பால்வளத்துறையிலும், ஆவினிலும் நடைபெறும் உண்மையான தகவல்களை சேகரித்து பேசிடுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“