காத்து வாக்குல ரெண்டு காதல் போன்று காதலித்த இரண்டு பெண்களையும் இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா அருகே பண்டா என்ற கிராமத்தில் வசித்து வரும் சந்தீப் ஓராவன் என்பவர் குசும் லக்ரா என்ற பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். அவருடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
அவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு சந்தீப் வேலைக்கு சென்றார். அந்த வேலைக்கு ஸ்வாதி குமாரி என்பவரும் வந்திருந்தார்.
அப்போது இடையே காதல் மலர்ந்தது. வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய பின்னரும் அவர்களது சந்திப்பு தொடர்ந்தது. அவர்களது இந்த காதல் அவர்களின் குடும்பத்தினருக்கும், கிராமத்தினருக்கும் தெரிய வந்தது.
இதனையடுத்து கிராமத்தினர் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றது. இதில், 2 பெண்களையும் சந்தீப் மணம் முடிக்க வேண்டும் என தீர்ப்பு முடிவானது. இதற்கு அந்த 2 பெண்களோ அல்லது குடும்பத்தினரோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இதனால் 3 பேரின் ஒப்புதலுடன், நடைமுறையில் இல்லாத இந்த திருமணம் பண்டா கிராமத்தில் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின்பு சந்தீப் கூறும்போது, 2 பெண்களை ஒன்றாக திருமணம் செய்வதில் சட்ட சிக்கல் இருக்கலாம். ஆனால், இரண்டு பேரையும் நான் காதலிக்கிறேன், அவர்கள் இருவரில் ஒருவரை கூட என்னால் விட்டு விட முடியாது என கூறியுள்ளார்.
newstm.in