ஆனாங்கூர் கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு காதல் விவகாரத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி விழுப்புரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விழுப்புரம் அடுத்த ஆனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகள் காதல் விவகாரத்தை தட்டிக் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கலியமூர்த்தியின் உறவினர் கோபி (17) என்ற சிறுவனை அதே ஊரைச் சேர்ந்தவர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்த கொலை நடைபெற்றது.
இதுதொடர்பாக விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் அதே ஊரைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளித்த கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) வெங்கடேசன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லட்சுமணன் (32), நாகராஜ் (33), தீனா என்ற வெங்கடேஷ் (33), மணி, சரண் (32), பாபு (32), அய்யப்பன் (36) ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை எனவும் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 7 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திலிருந்து கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM