புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட கோபாலகிருஷ்ண காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் முடிவதையொட்டி ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. ஆளும் பாஜக கூட்டணி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கடந்த 15-ம் தேதி டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தின.
இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டது. பவார் மறுத்ததால் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை நிறுத்த ஆலோசிக்கப்பட்ட நிலையில், அவரும் போட்டியிட மறுத்துவிட்டார்.
இந்நிலையில், மேற்குவங்க முன்னாள் ஆளுநரும் மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பரிசீலித்தனர். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என்று கோபால கிருஷ்ண காந்தியும் மறுத்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்கு வரவிருக்கும் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக என்னைத் தேர்வு செய்ய விரும்பி பல எதிர்க்கட்சித் தலைவர்கள் எனக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு மிக்க நன்றி.
ஆனால் இந்த விஷயத்தை ஆழமாகப் பரிசீலித்தேன். எதிர்க்கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்யும்போது தேசிய அளவில் ஒருமித்த கருத்தையும், எதிர்க்கட்சி ஒற்றுமையைத் தவிரவும் தேசிய சூழலையும் உருவாக்கும் ஒருவராக அந்தப் பதவிக்கு போட்டியிடுபவர் இருக்க வேண்டும்.
என்னை விட இதை சிறப்பாகச் செய்யும் மற்றவர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதுபோன்ற ஒருவருக்கு அந்த வாய்ப்பை அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.