குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிப்பு

புது டெல்லி: எதிர்வரும் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை போட்டியிட செய்து மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு சேதம் செய்வதை தடுக்க முடிவு செய்துள்ளோம். இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் யஷ்வந்த் சின்காவை பொது வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம். அனைத்து அரசியல் கட்சிகளும் யஷ்வந்த் சின்காவுக்கு வாக்களிக்க வேண்டும்” என எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் நோக்கில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா தலைமையில் 17 எதிர்க்கட்சிகள் டெல்லியில் கடந்த 15-ம் தேதி ஆலோசனை நடத்தின.

அப்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அவர் தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டார். இதையடுத்து, தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என பரூக் அப்துல்லா கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்த வாய்ப்பாக மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அவரும் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை முடிவு செய்ய எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்காவை குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் துணைத் தலைவராக இருந்த யஷ்வந்த் சின்கா, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஏதுவாக தனது ராஜினாமா கடிதத்தை திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பி இருந்தார். அதனை உறுதி செய்யும் வகையில் ட்வீட் ஒன்றும் அவர் செய்திருந்தார். அதில் எதிர்க்கட்சிகளின் நலனுக்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இருக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.

ஆளும் பாஜக தரப்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் வெகு விரைவில் உறுதி செய்யப்படுவார் எனத் தெரிகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய வரும் ஜூன் 29-ஆம் தேதி கடைசி தேதியாகும். தேவைப்படும் பட்சத்தில் ஜூலை 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.