தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. அதனால், அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இன்று மதியம் தேர்வு செய்யப்பட்டார். சரத் பவார் உள்ளிட்ட மூத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தனர்.
இந்த நிலையில், தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க கூட்டணி சார்பாகக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
பா.ஜ.க கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக இன்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சற்று முன்பு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
பழங்குடியினத் தலைவரான திரௌபதி முர்மு, ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுங்கட்சி சார்பிலும், எதிர்க்கட்சிகள் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டதால், குடியரசுத் தலைவர் தேர்தல் களம் பரபரக்கத் தொடங்கியிருக்கிறது.