அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலமாக சிதம்பரம் நடராஜர் கோயில் விளங்குகின்றது. புகழ்மிக்க இந்த சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய கோயில் தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதற்கு பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி பக்தர்கள் கனக சபையின் மீது ஏறி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடராஜர் கோயில் கணக்குகள், நகைகள் இருப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிதம்பரம் சென்றனர். இந்தக் குழுவுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு தராது எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கடந்த 7, 8-ம் தேதிகளில் ஆய்வு செய்ய வந்த சிறப்பு அதிகாரி சுகுமாறன் தலைமையிலான குழுவுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்காமல் வரவு செலவு கணக்குகளையும் காண்பிக்கவில்லை. மாறாக நீங்கள் சட்ட ரீதியான குழு இல்லை என்றும், உச்சநீதிமன்ற உத்தரவு படி அமைக்கப்பட்ட குழுவாக இருந்தால் வரவு- செலவு கணக்குகளை ஒப்படைப்போம். இல்லையென்றால் வரவு-செலவு கணக்குகளை காட்ட முடியாது என்று தீட்சிதர்கள் மறுத்து விட்டனர்.
இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றது.
இந்த சூழலில், சிதம்பரம் சபாநாயகர் (நடராஜர்) கோயில் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் கடலூரிலுள்ள இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் 20 மற்றும் 21-ம் தேதியில் நடைபெறும், அப்போது மக்கள் மனு அளிக்கலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டது.
சென்னை இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்த மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், வேலூர் இணை ஆணையர் லட்சுமணன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், விசாரணைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதி, கடலூர் இணை ஆணையர் அசோக்குமார் ஆகியோரைக் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
கடலூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை குழு அதிகாரிகளிடம் தெய்வத் தமிழ் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் மனு அளித்தனர்.
அதேபோல் காங்கிரஸ் கட்சி மூத்த துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், தீட்சிதர்களின் தீண்டாமை என மக்கள் அதிகாரம் சார்பில் சிவனடியார்கள் உள்ளிட்ட சிவ பக்தர்களிடம் 1 லட்சம் கையெழுத்து பெற்று மனுக்கள் அளிக்கப்பட்டது. அதன்படி விசாரணைக்குழு கருத்து கேட்பதற்காக இன்று மட்டும் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் 645 மனுக்கள் நேரிலும், மின்னஞ்சல் மூலமாக 3,461 மனுக்கள் பெறப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இன்று (ஜூன்.21) மாலை 3 மணி வரையிலும் மனு அளிக்கலாம் என்றும் ஆன்லைனில் [email protected] என்ற முகவரியில் கருத்து தெரிவிக்கலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“