கேரளாவுக்கு தினமும் 700 லோடு கனிம வளம் கடத்தல்! : அதிர்ச்சியில் ஆளுங்கட்சி| Dinamalar

ஆனைமலை :கோவை மாவட்டம் முழுதும் உள்ள, 14 சோதனைச்சாவடிகள் வாயிலாக, கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. இதை, பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்தியதால், ஆளுங்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி அருகே கஞ்சம்பட்டி, கே.நாகூர், ஜமீன்முத்துார், நல்லிக்கவுண்டன்பாளையம், கிணத்துக்கடவு வட்டாரத்தை சுற்றியுள்ள தேவராயபுரம், பொட்டையாண்டிபுரம், நெ.10 முத்துார், தேவம்பாடி கிராமங்களில் குவாரிகள் உள்ளன.

இவற்றில் இருந்து கருங்கற்கள், எம் – சாண்ட், பி.சாண்ட் உட்பட கனிம வளங்கள், பொள்ளாச்சி அடுத்துள்ள செமணாம்பதி, கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புணி, வீரப்பகவுண்டனுார், வாளையார் உட்பட, மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில எல்லை சோதனைச்சாவடிகள் வழியாக கேரளாவுக்கு செல்கின்றன.

கள நிலவரம்

ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமான, இரு தனியார் நிறுவனங்கள், கிராவல் மண் விற்பனையில் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. வருவாய்த்துறையில் அனுமதி பெற்று, யார் வேண்டுமானாலும் கிராவல் மண் எடுக்கலாம்.வருவாய்த்துறையினர், விண்ணப்பிப்பவர்களின் பெயரில் அனுமதி சீட்டு வழங்குகின்றனர். ஆனால், சில மாதங்களாக, விண்ணப்பிப்பவரின் பெயரில் அனுமதிச்சீட்டு பதிவு செய்து, தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்களிடம் வழங்கு கின்றனர்.
இந்த நிறுவன ஊழியர்கள், கிராவல் மண் பெற விண்ணப்பித்தோரிடம், யூனிட்டுக்கு, 400 ரூபாய் வீதம் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்ல, குவாரி உரிமையாளர், லாரியில் எடுத்துச் செல்வோரிடம், கனிம வளத்துறையினரின் ‘டிரான்சிட் பாஸ்’ வழங்குவது வழக்கம்.
ஆனால், ஆளுங்கட்சிக்கு நெருக்கமான தனியார் நிறுவன ஊழியர்களிடம், கனிம வளத்துறையினர் சட்ட விரோதமாக, ‘டிரான்சிட் பாஸ்’களை வழங்குகின்றனர்.கோவை மாவட்டத்தில், கேரள மாநில எல்லையிலுள்ள, 14 சோதனைச்சாவடிகள் அருகே, இந்த நிறுவனத்தினர், தனியாக சோதனைச்சாவடிகள் அமைத்துள்ளனர். கனிம வளங்கள் எடுத்து வருவோரிடம் இந்த சோதனைச்சாவடியில் இருப்பவர்கள் தடுத்து, யூனிட்டுக்கு, 400 ரூபாய் வசூல் செய்த பின், கேரளா செல்ல ‘டிரான்சிட் பாஸ்’ வழங்குகின்றனர். ஒரு அனுமதி சீட்டை பயன்படுத்தி, பல லாரிகளில் கேரளாவுக்கு கனிம வளங்களை கடத்துகின்றனர்.

பா.ஜ., புகார்

இந்நிலையில், கேரளாவுக்கு கனிம வளம் கடத்துவது மற்றும் கிராவல் மண் விற்பனையில், தி.மு.க.,வினர் சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் ‘கல்லா’ கட்டுவதாக, பொள்ளாச்சியில் நடந்த பா.ஜ., மாநாட்டில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.இதையடுத்து, நேற்று, கனிம வளம் கேரளாவுக்கு கொண்டு செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தோப்புகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, பா.ஜ.,வினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கனிமவளம் கடத்தல் பிரச்னையை, பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசத் துவங்கியுள்ளதால், ஆளுங்கட்சியினர் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.

நடவடிக்கை இல்லை

பா.ஜ., கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில், 14 சோதனைச்சாவடிகள் வழியாக தினமும், 700 லோடு கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. ஆளுங்கட்சியினரே அத்துமீறி தனியாக சோதனைச்சாவடிகள் அமைத்துள்ளனர்.

தி.மு.க.,வினருக்கு வருமானம்

கற்கள் எடுத்து வரும் லாரியினர், குவாரியினரை சோதனைச்சாவடியில் தடுத்து, யூனிட்டுக்கு, 400 ரூபாய் வசூலிக்கின்றனர். கனிம வளம் மற்றும் கிராவல் விற்பனை வாயிலாக, தி.மு.க.,வினர் தினமும், பல லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர். இவர்களுக்கு பணம் தர மறுப்பவர்களின் வாகனங்களை, போலீசாரை வைத்து பிடித்து, ஓவர் லோடு, அனுமதிச்சீட்டு இல்லை என, வழக்குகள் பதிவு செய்ய வைக்கின்றனர்.சட்ட விரோத செயல்களை தடுக்க வலியுறுத்தி, மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.