புது டெல்லி: சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில் ஸ்மார்ட் யோகா மேட்டை (Smart Yoga Mat) அறிமுகம் செய்துள்ளது யோகிஃபை. இதனை பயன்படுத்தும் பயனர்கள் யோகாசனங்களை முறையாக செய்கிறார்களா என்பதை இந்த மேட் சென்சார்கள் மூலம் கண்டறிந்து, அதை சரி செய்ய உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிட்னெஸ் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான WELLNESYS-இன் தயாரிப்பு தான் யோகிஃபை (YogiFi). தற்போது யோகிஃபை gen 2 மற்றும் gen 2 புரோ என இரண்டு வெர்ஷன்களில் ஸ்மார்ட் யோகா மேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அந்த நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட் யோகா மேட் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் சுமார் 17 நாடுகளில் இந்த நிறுவனத்தின் மேட் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக யோகிஃபை ai மேட் இந்த நிறுவனத்தின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனது இரண்டாவது தயாரிப்பை கொண்டு வந்துள்ளது அந்நிறுவனம்.
யோகிஃபை gen 2 சிறப்பு அம்சங்கள்: ஏ.ஐ தொழில்நுட்பத்தின் கீழ் இயங்குகிறது இந்த ஸ்மார்ட் யோகா மேட். யோகா பயிற்சி, யோகாசனங்கள் மற்றும் உடல் எடை சார்ந்த வொர்க்-அவுட் பயிற்சிகளை பயனர்கள் மேற்கொள்ள இந்த மேட் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேட்டை பயனர்கள் தங்கள் போனில் அதற்கென உள்ள பிரத்யேக செயலி மூலம் சிங்க் (Sync) செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் மூலம் பயனர்களின் ஆக்டிவிட்டியை இந்த மேட் டிராக் செய்யுமாம். குறிப்பாக இந்த மேட்டை பயன்படுத்தும் பயனர்கள் தவறாக யோகாசனங்களை மேற்கொள்ளும் போது அதுகுறித்த தகவலை இது தெரிவிக்குமாம். மேலும் அதை சரியாக செய்யும்படி பயனர்களிடம் தெரிவிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் பயனர்கள் பயிற்சியாளர்களுடன் இணைந்து செயலாற்றவும் இது உதவுமாம். ஆக்டிவிட்டி ஹிஸ்டரியை பயனர்கள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யோகிஃபை gen 2 மேட்டின் விலை ரூ.8,999 மற்றும் gen 2 புரோ விலை ரூ.18,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது. லிமிடெட் ஸ்டாக் வகையில் இந்த மேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.