மதுரை: தண்டனைக் கைதிகளின் பிள்ளைகளுக்கு கல்விச் சேவை அளிக்கும் கூட்டமைப்பு முயற்சியினால் இவ்வாண்டு பொதுத்தேர்வில் 39 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குடும்பத் தகராறு போன்ற சில பிரச்சினைகளில் மனைவிகளைக் கொன்றது மற்றும் எதிர்பாராத வகையில் பிற கொலைச் சம்பவங்களில் சிக்கிய சிலர் ஆயுள் தண்டனை கைதிகளாக மத்திய சிறைகளில் உள்ளனர். இவர்களின் பிள்ளைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உயர் கல்வி வரை படிக்க வைத்து முன்னேற்ற பாதைக்கு அனுப்பும் பணியை மதுரையில் செயல்படும் ‘உலக சமத்துவத்துக்கான கூட்டமைப்பு’ செய்கிறது.
இந்த அமைப்பின் நிறுவன தலைவராக கேஆர். ராஜா உள்ளார். இவர் ஏற்கெனவே பாளையங்கோட்டை சிறையில் மனநல ஆலோசகராக இருந்தவர். தற்போது, மதுரையில் வழக்கறிஞராக உள்ளார். இவரது முயற்சியால் கடந்த 2013 முதல் ஆயுள் தண்டனை கைதிகளின் பிள்ளைகள் நூற்றுக்கணக்கானோரை பள்ளி படிப்பு முதல் கல்லூரி வரை படிக்க வைத்து சிறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு தனியார் துறைகளில் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கின்றனர்.
தொடர்ந்து கல்வி சேவை புரியும் இவ்வமைப் பின் உதவியால் இவ்வாண்டு பிளஸ் 2 ,10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 39 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்து, கல்லூரிகளில் சேர தயாராக இருப்பதாக அமைப்பின் நிறுவன தலைவர் கேஆர்.ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறியது: ”விழுப்புரத்தைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதியின் மகள் பிளஸ் 2 தேர்வில் 537 மதிப்பெண் பெற்றுள்ளார். சிவகங்கை திறந்த வெளி சிறையில் உயிரிழந்த கோவில்பட்டி கைதியின் மகன் 358 மதிப்பெண்ணும், பாளையங்கோட்டை தண்டனைக் கைதி ஒருவரின் மகள் 321 மதிப்பெண்ணும், மதுரை சிறையிலுள்ள ராஜபாளையம் கைதி ஒருவரின் மகள் 358 மதிப்பெண்ணும் எடுத்துள்ளனர்.
இவர்களுடன் இவ்வாண்டு 10-ம் வகுப்பில் 16 பேரும், பிளஸ் 2 தேர்வில் 23 என 39 பேர் தேர்ச்சி பெற்று, அவர்களை கல்லூரிகளில் சேர்க்க ஏற்பாடு செய்துள்ளோம். கூடுதல் மதிப்பெண் பெற்ற 6 பேர் மத்திய பல்கலைகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும், நாங்கள் தத்தெடுத்து படிக்க வைக்கும் மாணவ, மாணவிகளின் தாயோ, தந்தையோ இல்லாமல், அப்படியே ஒருவர் இருந்தாலும், அவர்கள் மத்திய சிறைகளில் தண்டனை கைதியாக இருப்பர். உறவினர்கள் கவனம் செலுத்த முடியாமல், தாத்தா, பட்டியிடம் வளரும் குழந்தைகளின் எதிர்கால வாழ்வாதாரம் கருதி தத்தெடுத்து படிக்க வைக்கிறோம்.
பெற்றோர் இருந்தால் எப்படி கவனிக்கப்படுவார்களோ அதுபோன்று கல்வி, விடுதிக்கான கட்டணங்களை செலுத்துகிறோம். 2 மாத்திற்கு ஒருமுறை சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களுக்கு நேரில் சென்று தேவையான பொருட்களை வாங்கித் தருகிறோம். பெரும்பாலும், கைதியாக இருப்பவர்களின் பிள்ளைகள் சமூகத்தில் வேறுமாதிரி பார்க்கப்படுகின்றனர். அவர்களின் வாழ்க்கை மாற்றியமைக்கும் விதமாக கல்வியில் உயர்த்தி, அரசு, தனியார் துறைகளில் பணியில் அமர்த்த வழிகாட்டுகிறோம்.
மதுரை சென்னை, கோவை போன்ற இடங்களில் தந்தை, தாய் இருந்த, இருக்கும் சிறைகளிலேயே காவலர்களாக சிலர் பணிபுரிகின்றனர். மேலும், சிலர் சட்டம் உள்ளிட்ட பிற கல்வி பயில்கின்றனர்” என்று அவர் கூறினார்.